ரஷ்யாவுக்காக உளவு பார்த்த பெண்: ஜேர்மனியில் வழக்கு விசாரணை துவக்கம்
Trial of Berlin woman accused of spying for Russia begins: ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண்ணொருவர் மீதான வழக்கு விசாரணை துவங்கியுள்ளது.
ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக ஜேர்மன் பெண்ணொருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கு விசாரணை நேற்று துவங்கியுள்ளது.
ரஷ்யாவுக்காக உளவு பார்த்த பெண்
ஜேர்மன் தலைநகரான பெர்லினைச் சேர்ந்தவர் இலோனா (Ilona W). அவர் ஜேர்மன் மற்றும் உக்ரைன் இரட்டைக் குடியுரிமை கொண்டவர் ஆவார்.
ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக, ஜனவரி மாதம் 21ஆம் திகதி கைது செய்யப்பட்டார் இலோனா.

ஜேர்மனியில் பாதுகாப்புத் துறை தொடர்பான தொழிற்சாலைகள் எங்கு உள்ளன என்பது போன்ற விடயங்கள், ட்ரோன் பரிசோதனைகள் மற்றும் உக்ரைனுக்கு ட்ரோன்கள் வழங்கும் திட்டம் போன்ற விடயங்களை அறிந்துகொள்ளும் நோக்கில், இலோனா, ஜேர்மனியின் இந்நாள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சக அலுவலர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன், பெர்லினிலுள்ள ரஷ்ய தூதரகத்தில், ரஷ்ய உளவுத்துறைக்காக வேலை செய்யும் ஒரு நபருடன் இலோனாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், அந்த நபர் ஜேர்மன் முக்கியஸ்தர்களுடன் உறவை ஏற்படுத்திக் கொள்வதற்காக, இலோனா அவரை வேறொரு பெயரில் பல முறை அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்க உதவியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இலோனா மீதான வழக்கு விசாரணை நேற்று பெர்லின் நீதிமன்றம் ஒன்றில் துவங்கியுள்ளது.