வேலை கொடுப்பதாக ஆசை காட்டி வெளிநாட்டவர்களை சுவிட்சர்லாந்துக்குக் கொண்டுவந்த நபரின் மோசமான செயல்கள்...
சுவிஸ் நாட்டவர் ஒருவர், நல்ல வேலை தருவதாகக் கூறி வெளிநாட்டவர்கள் சிலரை சுவிட்சர்லாந்துக்கு வரவழைத்துள்ளார்.
ஆனால், அவர்களை அவர் மோசமாக நடத்திவந்தது தெரியவந்துள்ளது.
நல்ல சூழலில் வேலை என ஏமாற்றி மோசடி செய்தவர்
42 வயதுடைய அந்த சுவிஸ் நாட்டவர், நல்ல வேலைச் சூழலில் வேலை இருப்பதாகக் கூறி வெளிநாட்டவர்களை சுவிட்சர்லாந்துக்கு வரவழைத்துள்ளார்.
ஆனால், தான் வாக்களித்த ஊதியத்தை அவர் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக, அவ்வப்போது கொஞ்சம் பணம் மட்டும் கொடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், வேலை செய்பவர்கள் எதிர்த்துக் கேள்வி கேட்டால், அவர்களை ஷாக் கொடுக்கும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும், ஊதியம் தராமல் வேலையை விட்டு நிறுத்திவிடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
ஏமாந்தவர்கள் எந்த நாட்டவர்கள்?
குறிப்பாக, ஹங்கேரி மற்றும் மால்டோவா நாட்டு கட்டுமானப்பணியாளர்கள் அந்த சுவிஸ் நாட்டவரால் பல ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.
தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தனது நிறுவனப் பணத்தில் 600,000 சுவிஸ் ஃப்ராங்குகளை தன்னுடைய சொந்த விடயத்துக்காக பயன்படுத்தியதாகவும் அதிகாரிகள் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார்கள்.
அவர் மீது மனிதக் கடத்தல் முதல் பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் நேற்று சூரிச் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.