சுவிஸ் நாட்டில் நிகழ்ந்த யாழ்ப்பாண வயாவிளான் மத்திய கல்லூரி உப அதிபரின் அஞ்சலி நிகழ்வு
சுவிற்சர்லாந்து நாட்டில் இலங்கை யாழ்ப்பாண வயாவிளான் மத்திய கல்லூரியின் முன்னாள் உப அதிபர் இலக்கிய உலகின் பெரு விருட்சம் , குரும்பசிட்டியின் பெரும்புகழ் நாயகர் கவிநாயகர் திரு.வி. கந்தவனம் ஐயா அவர்களது நினைவுகளைச் சுமந்து வயாவிளான் பழைய மாணவர் சங்க சுவிஸ் கிளையினரால் 14. 04. 2024, அன்று முன்னெடுக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வு நிகழ்த்தப்பட்டுள்ளது.
புத்தாண்டின் புலர்வோடு நீண்ட கால இடைவெளியின் பின் முளைவிட்டு நிற்கும் வயாவிளான் பழைய மாணவர் சங்க கிளையின் முதலாவது நிகழ்வு இதுவாகும்.
வயாவிளான் கல்லூரி பழைய மாணவர் , பூரண சுவாமி ( சண்முகராஜா ஐயா) அவர்களது புனித சுகந்தம் தரும் பூரண இல்லத்தில் , இறை வழிபாட்டோடு ஒரு புண்ணிய ஆத்மாவின் அஞ்சலி நிகழ்வு புனிதமாக நிகழ்ந்தேறி இருப்பதென்பது ஆத்ம திருப்தி அளிக்கும் ஒரு விடயமே!
நல்லாசிரியராய் ,நல்லதிபராய் , சிறந்த சொற்பொழிவாளராய் , நாடக நடிகராய் , ஆத்மீக யோதியாய் , கலை ஆர்வலராய் , ஊரை உயர்த்தும் ஏணியாய் , உலகம் போற்றும் உத்தம மனிதராய் , அதற்கும் மேலாய் மாபெரும் கவிக் கோவாய்த் திகழ்ந்த அமரர் கந்தவனம் ஐயா அவர்களது நினைவுகளைச் சுமந்து பலரும் பன்முகப் பார்வையில் இரங்கலுரையை அன்று நிகழ்த்தியிருந்தனர்.
வயாவிளான் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க சுவிஸ் கிளையின் தலைவர் திரு. தசச்சிதானந்த மூர்த்தியின் தலைமை உரையோடு இந்நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.
பூரண இல்ல பக்தரான lrene Zeltner அம்மையாரின் தாய்மொழி வாழ்த்தும் பெரியபுராண ஓதலும் நடைபெற்று, வந்தாரை வரவேற்று உபசரித்து முழு மனத்துடன் நிகழ்வொழுங்கைச் செய்துதவிய பூரண சுவாமி அவர்களது நினைவுப் பேருரையும் பூரண இல்ல நிர்வாகத் தலைவர் குரும்பசிட்டி திரு . மகேந்திரன் சக்திபாலன் அவர்களது அமரருடனான மண்சார் நினைவுப் பகிர்வும் மற்றும் இவ்வில்ல நிர்வாக உறுப்பினரான திரு .ஆ . கமலேந்திரன் அவர்களது உரையும் இடம் பெற்றது.
அத்துடன் அமரரது ஆக்கங்களான 80 வரையான புத்தகங்களில் சிலவற்றையும் பூரணசுவாமி அவர்கள் அங்கு காட்சிப்படுத்தினார்.
‘நான் கண்ட கவிஞர் கந்தவனம் ‘ எனும் தலைப்பில் வயாவிளான் கல்லூரிப் பழைய மாணவர் திரு . நா . றஞ்சன் அவர்களும் ’ ‘செம்மை நெறி நில் என்னும் சீரிய வாய்மொழியால் ‘ கல்லூரிக் கீதம் தந்து கற்றவர்கள் மத்தியிலே நித்திலமாய் ஒலித்து நிற்பவரான அமரரை நெஞ்சிலிருத்தி கவிதாஞ்சலியை திருமதி பி. அஞ்சலா அவர்களும் கல்லூரிக்கால நினைவுகளை திரு . கி. இரகுநாதன் அவர்களும் நன்றியுரையை திரு. த. பிரபாகரனும் ஆற்றியிருந்தனர்.
நாடக அரங்கியற் துறைசார் கலைஞர்களான திரு . ஏ.ஜி.யோகராஜா , திரு . வாவி . பாஸ்கர் , திரு . சக. இரமணன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து இரங்கலுரையை நிகழ்த்தி இருந்துள்ளார்கள்.
அத்துடன் கனடாவிலிருந்து இந்துசமயப் பேரவையின் செயலாளர் திரு . சிவ . முத்துலிங்க சுவாமிகளும் அவுஸ்திரேலியாவிலிருந்து கல்லூரியில் கந்தவனம் ஐயாவுடன் சமகாலத்தில் கடமையாற்றிய திருமதி . மகாசிவம் ஆசிரியையும் நெதர்லாந்திலிருந்து அமரரவர்கள் காலத்தில் கற்ற பழைய மாணவி திருமதி . சி . விமலாதேவி அவர்களும் கொழும்பு பழைய மாணவர் சங்க கிளை சார்பாக அமரரது மாணவர் திரு. செ. சக்திதரன் அவர்களும் குரல் பதிவினூடாக உரையாற்றியும் கவிதாஞ்சலியை சமர்ப்பித்துள்ளனனர்.
கல்லூரிக் கீதத்துடனும் கனடாவிலிருந்து அமரரது மகள் திருமதி ரு. வாணி அவர்களது நன்றி நவிலலுடனும் இவ் அஞ்சலி நிகழ்வானது அமைதியுடன் நிறைவுற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |