திருகோணமலை அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மாள் ஆலய திருவிழா ஆரம்பம்!
இயற்கை எழில் கொஞ்சும் திருக்கோணமலையில் திருக்கோணேஸ்வர் பெருமானின் நேரடிப் பார்வையில் அமையப் பெற்று அருளாட்சி புரியும் பூலோக மகாசக்தி, அசஷ்டாதச (18) சக்தி பீடங்களில் முதன்மையானதும் 51 சக்தி பீடங்களில் ஒன்றுமாகிய திருகோணமலை அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மாள் தாயார்.
வடகிழக்கின் தலை நகராம் எனப் போற்றப்படும் திருக்கோணமலையின் நகரின் மத்தியில் நகராட்சி மன்றத்திற்கு அருகாமையிலும் ஈச்சரங்களில் ஒன்றான பாடல் தலமாக வரலாற்று சிறப்புமிக்க திருக்கோணேஸர் கோவிலின் அருகாமையிலும் அமைந்துள்ளமையே இதன் சிறப்பு.
இவ்வாலயத்தின் வரலாற்றினை திட்டவட்டமாக வரையறுத்து கூறமுடியவில்லையென்றாலும் இவ்வாலயத்தில் கிடைத்துள்ள கல் வெட்டுக்கள் பழைய சாசனங்கள் கர்ண பரம்பரையாக வழங்கி வரும் கதைகள் அக்கதைகளோடு தொடர்புடையதாய் தற்பொழுது ஆலயத்தில்லிருக்கும் விக்கிரகங்கள்,தகளி,வாகனம் என்பவற்றை ஆதாரமாக்க் கொண்டு முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தின் பதினோராம் நூற்றாண்டில் இவ்வாலயம் சிறப்புற்றிரிக்க வேண்டுமென்று சரித்திர பேராசிரியர் குணசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
இவ் ஆலயத்தில் மிகவும் விமர்சையாக நடைபெரும் விழாக்களில் ஒன்றான அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்ஸவம் 18-03-2021 வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும்.
அதனைத் தொடர்ந்து திருவிழா நடைபெறும் 22-03-2021 திங்கட்கிழமை 05 ம் திருவிழா மாலை 6.00 மணிக்கு இடம் பெறும் அன்று அம்பாள் மஞ்சத்தில் பவனி வருதல் நடைபெறும்.
26-03-2021 வெள்ளிக்கிழமை சப்பறத்தில் அம்பாள் பவனி வருதல் இடம் பெறும்.
27-03-2021 சனிக்கிழமை காலை 5.00 மணிக்கு மூலஸ்தானபூஜை 6.30 மணிக்கு வசந்த மண்டப பூஜை இடம் பெற்று காலை 8.00 மணிக்கு அம்பாள் தேரில் ஆரோகணித்து விநாயகரும் முருகனும் முன்னே வர அம்பாள் தனக்கென அமைக்கப்பட்ட சித்திரத் தேரினில் பவனி வந்து அடியார்களுக்கு காட்சி கொடுத்தருளுவாள்.
28-03-2021 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு அம்பாள் புராதன சிம்மவாகனத்தில் திருகோணமலை சமூத்திரக்கரைக்கு எமுந்தருளி சூரியோதயத்தில் தீர்த்தோற்ஸவம் நிகமும்.
இம்முறை நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் -19 தாக்கங்கள் காரணமாக அடியார்கள் ஆலயத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து முகக் கவசங்களை அணிந்திருத்தலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.