திரிவேணி சங்கமம் தண்ணீரை குடிக்கலாம்.., குளிப்பதற்கு ஏற்றதல்ல என்ற நிலையில் யோகி ஆதித்யநாத் பேச்சு
திரிவேணி சங்கமத்தில் உள்ள தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது என்று உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.
யோகி ஆதித்யநாத் பேச்சு
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ம் திகதி மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது.
உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் மகா கும்பமேளாவுக்கு வருகை தருகின்றனர். இதுவரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
இந்நிலையில், மகா கும்பமேளா நதிகளில் உள்ள தண்ணீரில் 'Faecal Coliform' என்ற பாக்டீரியா அதிகளவில் இருப்பதால் குளிப்பதற்கு தகுதியற்றவை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
அதாவது, மகா கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜ், கங்கை மற்றும் யமுனை ஆறுகள் சங்கமிக்கும் பல்வேறு இடங்கள் குளிப்பதற்கு தகுதியற்றவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிவிப்புக்கு உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உத்தரபிரதேச சட்டசபையில் பேசிய யோகி ஆதித்யநாத், "மகா கும்பமேளாவில் இதுவரை 50 கோடிக்கும் மேலானோர் புனித நீராடியுள்ளனர். கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஒன்றாக கலக்கும் திரிவேணி சங்கமத்தில் உள்ள தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது.
சனாதன தர்மத்தை எதிர்ப்பவர்கள் இதுபோன்ற தவறான கருத்துக்களை பரப்புகின்றனர். இப்படி செய்வது 56 கோடி மக்களின் நம்பிக்கையுடன் விளையாடுவது போன்றது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |