ஆபத்தான கட்டத்தில் நாடு - மூடிய அறைக்குள் மாணவர்களுக்கு சிக்கல்
தற்போது பாரியளவிலான பாடசாலை மாணவர்கள் கோவிட் தொற்றுக்குள்ளாவதால் மூடிய அறைகளில் கற்பது தொடர்பில் தீவிர அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் கோவிட் தொற்றுக்குள்ளாகுவது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனை குறிப்பிட்டுள்ளார். அடுத்த இரண்டு வாரங்கள் இலங்கைக்கு மிகவும் அவதானமிக்கவை.
தற்போது பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்த மட்டத்தில் காணப்படுகின்ற போதிலும், பதிவாகாத நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போடாதவர்களும், சமூகத்தில் பரவி வரும் கட்டுக்கதையால் தடுப்பூசி போடுவதில் தாமதம் செய்பவர்களும் கடும் ஆபத்தில் உள்ளனர். ஒமிக்ரோன் மாறுபாடு அவ்வளவு தீவிரமானது அல்ல என்று பரவலாக நம்பப்பட்டாலும், பலர் இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
அறிகுறிகளுடன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட அளவை விடவும் அதிக மாணவர்களை வரையறுக்கப்பட்ட இடங்களில் வைத்திருந்தால், கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் சுகாதார கட்டமைப்பினால் தாங்கிக் கொள்ள முடியாத அளவில் கோவிட் கொத்தணிகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.
எனவே, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறிப்பாக தங்கள் பிள்ளைகள் மற்றும் அவர்களின் சுகாதார நடைமுறைகள் மீது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
திருமணங்கள், பொதுக்கூட்டங்கள், மக்கள் கூடும் இடங்கள், அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் தொற்றுகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. அடுத்த இரண்டு வாரங்கள் அவதானமாக செயற்படவில்லை என்றால், மருத்துவமனை கட்டமைப்பு மற்றும் சுகாதாரத் துறையினரால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு தொற்றாளர்கள் அதிகரிக்க கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.