பெரிய நாடுகள் சர்வதேச சட்டத்தை மீறுகிறது என்றால்... மீண்டும் இந்தியாவை வம்பிழுத்த கனேடிய பிரதமர் ட்ரூடோ
பெரிய நாடுகள் விளைவுகள் எதையும் எதிர்கொள்ளாமல் சர்வதேச சட்டத்தை மீறுகிறது என்றால் உலகம் அனைவருக்கும் மிக ஆபத்தான ஒன்றாக மாறும் என கனேடிய பிரதமர் ட்ரூடோ மீண்டும் இந்தியாவை வம்பிழுத்துள்ளார்.
தூதரக மோதல் நீடிக்கும்
இந்தியாவுடனான தூதரக மோதல் நீடிக்கும் நிலையிலேயே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
@reuters
காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக ட்ரூடோ குற்றம் சாட்டியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
45 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் பிரதமர் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை மொத்தமாக மறுத்த இந்தியா அவரது குற்றச்சாட்டுகள் அபத்தமானது என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையிலேயே ஊடகங்களை சந்தித்த பிரதமர் ட்ரூடோ, கனடா சார்பில் நிஜ்ஜார் வழக்கை அமெரிக்கா இந்தியாவிடம் விவாதிக்குமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,
மிக ஆபத்தான ஒன்றாக மாறும்
கனேடிய மண்ணில் கனேடிய குடிமகன் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்ற நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் ஆரம்பத்திலிருந்தே எங்களுக்குத் தெரிந்தபோது, இந்த விடயத்தின் உண்மைத்தன்மையை அறிய எங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு நாங்கள் இந்தியாவை அணுகினோம் என்றார்.
@reuters
மட்டுமின்றி, அமெரிக்கா போன்ற எங்கள் நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகளையும் நாங்கள் அணுகினோம் என்றார். கனடா எப்போதும் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள நாடு என குறிப்பிட்டுள்ள ஜஸ்டின் ட்ருடோ,
இந்தியாவை மறைமுகமாக குறிப்பிட்டு பெரிய நாடுகள் விளைவுகள் எதையும் எதிர்கொள்ளாமல் சர்வதேச சட்டத்தை சர்வ சாதாரணமாக மீறுகிறது என்றால் உலகம் அனைவருக்கும் மிக ஆபத்தான ஒன்றாக மாறும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.
மேலும், இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாக செயல்பட கனடா முயற்சித்துள்ளது, அது தொடர்ந்து செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |