உக்ரைனுக்கு உதவிட கனேடிய மக்களுக்கு ட்ரூடோவின் பாரிய அறிவிப்பு!
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உக்ரைன் இறையாண்மை பத்திரம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் இறையாண்மை பத்திரம்
ரஷ்யாவின் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு உதவிட கனடா அரசாங்கம் 500 மில்லியன் டொலர்கள் உக்ரைன் இறையாண்மை பத்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
உக்ரைனின் துணிச்சலான மக்களுக்கு நேரடியாக ஆதரவளிக்கும் வாய்ப்பை கனேடியர்களுக்கு வழங்க இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிதியின் மூலம் குளிர்காலத்தில் உக்ரேனியர்களுக்கு ஓய்வூதியம், எரிபொருள் வாங்குதல் மற்றும் ஆற்றல் உள்கட்டமைப்பை மீட்டமைத்தல் போன்ற அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்து வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, கனடா அரசாங்கம் பங்குபெறும் நிதி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளதாகவும், இதன்மூலம் ஆர்வமுள்ள கனேடியர்களுக்கு 100 டொலர்கள் மதிப்பிலான உக்ரைன் இறையாண்மை பத்திரத்தை வாங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உக்ரைன் இறையாண்மைப் பத்திரத்தை வாங்கும் கனேடியர்கள், வெளியீட்டின் போது சந்தை நிலவரங்களுக்கு உட்பட்டு, தற்போதைய 3.3 சதவீத வருவாய் விகிதத்தில் வழக்கமான ஐந்தாண்டுக்கான கனடா அரசாங்கப் பத்திரத்தை வாங்குவார்கள் என்றும், கனேடியர்கள் தங்கள் முதலீட்டின் பாதுகாப்பில் நம்பிக்கையுடன் இருக்க முடியும், இது கனடாவின் AAA கடன் மதிப்பீட்டால் முழுமையாக ஆதரிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
பத்திர வெளியீடு முடிந்ததும், உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகளுக்கு உட்பட்டு, பத்திரத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு சமமான தொகை உக்ரைனுக்கான சர்வதேச நாணய நிதியம் (IMF) நிர்வகிக்கப்படும் கணக்கு மூலம் உக்ரைனுக்கு மாற்றப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
@Patrick Doyle/Reuters
உக்ரைனுக்கு அத்தியாவசிய சேவைகள்
இதுதொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள பதிவில், 'கனேடியர்கள் தற்போது இறையாண்மைப் பத்திரங்களை வாங்கலாம். இந்தப் பத்திரங்கள் கனேடியர்கள் உக்ரைனுக்கு நேரடி ஆதரவை வழங்க அனுமதிக்கின்றன. எனவே உக்ரேனிய அரசாங்கம் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்து வழங்க முடியும்' என தெரிவித்துள்ளார்.
Update: Canadians can now purchase Ukraine Sovereignty Bonds. These bonds allow Canadians to provide direct support to Ukraine, so the Ukrainian government can keep providing essential services. Find out more here: https://t.co/7X0K3mvWXJ
— Justin Trudeau (@JustinTrudeau) November 21, 2022
IMF உட்பட உலக வங்கி மற்றும் மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான ஐரோப்பிய வங்கி என சர்வதேச நிதி நிறுவனங்களில் அதன் பங்குகள் மூலம் உக்ரைனுக்கு கனடா கூடுதல் ஆதரவை வழங்குகிறது.
ரஷ்யாவின் சட்டவிரோத படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, இந்த மூன்று நிறுவனங்களும் சேர்ந்து உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக 28.5 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையை வழங்கியுள்ளன.