புடினுடைய தோல்வியை உறுதி செய்ய உலகம் கங்கணம் கட்டிக்கொண்டுள்ளது: கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
உக்ரைன் போரில் புடின் தோல்வியை சந்திப்பதை உறுதி செய்வதற்காக, ரஷ்யா மீது பல ஆண்டுகளுக்கு தடைகளை நடைமுறையில் வைத்திருப்பது முதல், உலகம் என்ன வேண்டுமானாலும் செய்யும் என்று கூறியுள்ளார் கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ.
புடின் புரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால், அவர் செய்வதை எதிர்த்து நிற்பதற்கு உலகம் கங்கணம் கட்டிக்கொண்டுள்ளது என்பதைத்தான் என்றார் அவர்.
அவரது சட்ட விரோத போர், உக்ரைனை மேலும் ஊடுருவுவதன் மூலம் அவர் செய்துள்ள மீறல்கள், இவற்றையெல்லாம் பார்க்கும்போது, உலகம் என்ற முறையில் நாங்கள் அனைவரும் அவரைத் தோற்கடிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று கூறியுள்ளார் அவர்.
திடீரென சர்ப்ரைஸாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைனுக்குச் சென்றது குறித்து பேசிய ட்ரூடோ, ஜெலன்ஸ்கி தனது நண்பர் என்றும், புடின் மிகப்பெரிய தவறு செய்கிறார் என்றும் கூறினார்.
வெற்றிவிழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்க இருக்கும் புடினுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த ட்ரூடோ , அவர் பொதுமக்கள் மீது அராஜக செயல்களில் ஈடுபடுகிறார் என்றும், அதையெல்லாம் அவர் செய்வதற்குக் காரணம், தான் வெற்றிபெற்றுவிடுவேன் என்ற எண்ணம்தான் என்றும், ஆனால், அவர் தோல்வியடையத்தான் போகிறார் என்றும் கூறினார்.