மகனுக்கு பொதுமன்னிப்பு கொடுத்த பைடன்! நீதித்துறைக்கு களங்கம் என கொந்தளித்த ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மகன் ஹண்டர் பைடனுக்கு பொதுமன்னிப்பு வழங்கியதற்கு டொனால்ட் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொதுமன்னிப்பு
அமெரிக்காவின் சட்டத்தைப் பொறுத்தவரை ஜனாதிபதியாக இருக்கும் நபர் பொதுமன்னிப்பு வழங்கினால், குற்ற வழக்குகளில் சிக்கிய நபரின் சிறை தண்டனையை ரத்து செய்ய முடியும்.
தற்போது பதவிக்காலம் முடியும் தருவாயில் உள்ள ஜோ பைடன் (Joe Biden), சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கி வைத்திருந்தது, 1.4 மில்லியன் டொலர்கள் வரி ஏய்ப்பு ஆகிய வழக்குகளில் சிக்கிய தனது மகன் ஹண்டர் பைடனுக்கு (54) பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
ஜோ பைடன் கடைசியாக தனது அதிகாரத்தை பயன்படுத்தி எடுத்த முக்கிய முடிவுகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
என் வார்த்தையைக் காப்பாற்றினேன்
இதுகுறித்து வெளியான வெள்ளை மாளிகை அறிக்கையில், "இன்று என் மகன் ஹண்டருக்கு பொது மன்னிப்பு வழங்கி கையெழுத்திட்டேன். நான் பதவியேற்றபோது நீதித்துறையின் முடிவுகளில் தலையிட மாட்டேன் என்று கூறியிருந்தேன்.
அதை இதுநாள் வரையில் காப்பாற்றி வந்துள்ளேன். என் மகன் மீதான விசாரணை நியாயமற்ற முறையில் நடந்தபோதும், நான் என் வார்த்தையைக் காப்பாற்றினேன்.
ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மகன் என்ற ஒரே காரணத்தினால் ஹண்டர் மீது விசாரணை நடந்துள்ளது. என் மகனை வைத்து எனது செயல்பாடுகளை நிறுத்த முயற்சி நடந்தது. எனவே தற்போது மன்னிப்பு வழங்கியுள்ளேன்" என பைடன் அதில் கூறியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் இதனை கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் "நீதித்துறையே கருச்சிதைவு செய்யப்பட்டுள்ளது" என ஜோ பைடனின் முடிவை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 2021யில் ஆட்சியை இழந்தபோது, வெள்ளை மாளிகை பகுதியில் போராட்டம் நடத்தி தற்போது சிறையில் இருக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் இதேபோல் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |