பிரித்தானிய வெளியுறவுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள நபர்: ட்ரம்ப் கடும் கோபம்
ட்ரம்பை தொடர்ந்து விமர்சித்துவரும் ஒருவர் பிரித்தானிய வெளியுறவுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளதால், ட்ரம்ப் கடும் கோபம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்புக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ள விடயம்
பிரித்தானியாவின் புதிய பிரதமரான ஆன்டி பர்னாம், தனது அமைச்சரவையில் வெளியுறவுச் செயலராக எட் மிலிபேண்ட் என்பவரை நியமித்துள்ளார்.

ஆனால், எட் மிலிபேண்ட் வெளியுறவுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள விடயம், அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
மிலிபேண்டின் நியமனம் குறித்து வெள்ளை மாளிகை மிகுந்த கவலை கொண்டுள்ளதாக டெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், ஸ்டார்மர் பதவி விலகுவதாக அறிவித்த பிறகு, டிரம்ப் நிர்வாகத்திற்கும் பர்னாமின் உயர்மட்டக் குழுவிற்கும் இடையே நடந்த அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகளின்போது, எட் மிலிபேண்டின் நியமனம், பிரித்தானியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சிறப்பு உறவுக்கு தீங்கு விளைவிக்கும் என்றே அமெரிக்கா கருதும் என ட்ரம்ப் நிர்வாகம் ஆன்டி பர்னாமுக்கு எச்சரிக்கை விடுத்ததாக டிரம்பின் முன்னாள் தலைமை வியூக ஆலோசகரான ஸ்டீவ் பேனன் கூறியுள்ளார்.

எட் மிலிபேண்டுக்கும் டிரம்பிற்கும் இடையிலான முக்கிய கருத்து வேறுபாடுகளில் ஒன்று, பசுமை ஆற்றல் விஷயத்தில் அவர்களின் நிலைப்பாடு ஆகும்.
மிலிபேண்ட் எரிசக்தித் துறை அமைச்சராக இருந்தபோது பல மாதங்களாகத் தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்கப்பட்டபோதிலும், வட கடலில் துளையிட்டு எண்ணெய் எடுப்பதற்கு எப்போதுமே தயக்கம் காட்டி வந்தார்.
மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிப்ரவரியில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் எதிர்க்கட்சிக்குத் தலைமை தாங்கிய மிலிபேண்ட், அமெரிக்காவுடன் பிரித்தானியா தனது ராணுவத் தளங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு எதிராக வலுவாகக் குரல் கொடுப்பவர்களில் ஒருவராக இருந்தார்.
அத்துடன், சாகோஸ் தீவுகளில் டியாகோ கார்சியாவைப் பயன்படுத்துவதற்கான அமெரிக்காவின் கோரிக்கையை சர் கெய்ர் நிராகரிக்கவும் மிலிபேண்ட்தான் உதவினார். அதைத் தொடர்ந்துதான், கோபமடைந்த ட்ரம்ப், கெய்ர் ஸ்டார்மர் ஒன்றும் வின்ஸ்டன் சர்ச்சில் அல்ல என விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |