டொனால்டு ட்ரம்ப் மீது கொலை முயற்சி... நூலிழையில் தப்பிய பின்னர் கூறிய அந்த விடயம்
பென்சில்வேனியா பொதுக்கூட்டத்தின் போது ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் மீது கொலை முயற்சி நடந்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காயங்களுடன் தப்பிய ட்ரம்ப்
துரிதமாக செயல்பட்ட உளவுத்துறை அதிகாரிகள், தாக்குதலில் ஈடுபட்ட நபரை சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாகிச் சூடு நடந்து காயங்களுடன் ட்ரம்ப் தப்பிய நிலையில், முகத்தில் ரத்தம் படர, அவர் தமது முஷ்டியை சுருட்டி உயர்த்திக் காட்டியுள்ளார்.

தொடர்ந்து அவர் மேடையில் இருந்து பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் நலமாக இருப்பதாகவே, அவரது குழுவினர் பின்னர் உறுதி செய்துள்ளனர்.
இதனிடையே, தாக்குதல்தாரி இறந்துள்ளார் என்பதை உளவுத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அத்துடன், ட்ரம்ப் ஆதரவாளர்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், இருவர் பலத்த காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி தற்போது பாதுகாப்பாக இருக்கிறார், அவரது நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளனர்.
அப்பட்டமான கொலை முயற்சி
மேலும், நடந்த சம்பவம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த வழக்கை FBI அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்றும் உளவுத்துறை தங்களின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பரப்புரை கூட்டத்தின் போது துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதும், குனிந்துகொள்ளுங்கள் என மக்கள் அலறியுள்ளனர். மேடையில் இருந்து அவரை அவசரமாக அதிகாரிகள் வெளியேற்றிவரும் நிலையிலும், அவர் தொடர்ந்து எனது காலணிகளை எடுத்துக் கொள்ள அனுமதியுங்கள் என கூறி வந்துள்ளார்.
இதனிடையே, துப்பாக்கி குண்டு தமது காதின் அருகே உரசிச் செல்லும் சத்தம் தாம் கேட்டதாகவும், தமது காதை அது கிழித்துள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தாக்குதல்தாரி கொல்லப்பட்டதை உளவுத்துறை தம்மிடம் உறுதி செய்ததாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது அப்பட்டமான கொலை முயற்சி என்றே ட்ரம்ப் தரப்பில் நம்புகின்றனர். டொனால்டு ட்ரம்ப் மீதான தாக்குதலுக்கு ஜனாதிபதி ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் இது கொலை முயற்சி என்பதை ஜோ பைடன் உறுதி செய்ய மறுத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |