டொனால்டு ட்ரம்ப் தெரிவு செய்த 9 அமைச்சர்கள் உயிருக்கு அச்சுறுத்தல்... வெளிவரும் முழு பின்னணி
டொனால்ட் ட்ரம்பின் அமைச்சரவை மற்றும் அவரது வெள்ளை மாளிகை அதிகாரிகளாக தெரிவான பலர் மீது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை 9 அமைச்சர்கள்
தொடர்ச்சியான வெடிகுண்டு மிரட்டல் மட்டுமின்றி, குற்றவியல் ரீதியாக துன்புறுத்தும் நடவடிக்கைகளும் அடையாளம் காணப்பட்டதை அடுத்து பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக FBI தெரிவித்துள்ளது.
இதுவரை 9 அமைச்சர்கள் மீது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு, வீட்டுவசதி, விவசாயம் மற்றும் தொழிலாளர் துறைகளுக்கு தெரிவான அமைச்சர்கள் மீதே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு தூதர்களாக தெரிவானவர்கள் மற்றும் வெள்ளை மாளிகையில் சிறப்பு அதிகாரிகள் பணிக்கு தெரிவானவர்கள் மீதும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்கிழமை இரவும் புதன்கிழமையும் நடந்த இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ட்ரம்பின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவர் குறிப்பிடுகையில்,
ட்ரம்ப் நியமனம் செய்யப்பட்டவர்களின் உயிருக்கும் அவர்களுடன் வசிப்பவர்களுக்கும் அமெரிக்காவுக்கு எதிரான வன்முறை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அத்துடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சட்ட அமலாக்கத்துறை விரைவாகச் செயல்பட்டுள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜனாதிபதி ட்ரம்பை எங்களின் முன்மாதிரியாகக் கொண்டு, உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் வன்முறைச் செயல்கள் எங்களைத் தடுக்காது என்றார்.
பாதுகாப்பு வட்டத்தில் இல்லை
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக ட்ரம்ப் நியமிக்கப்பட்டுள்ள Elise Stefanik என்பவரே, குடியிருப்பின் மீது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக முதலில் புகார் அளித்தவர். பாதுகாப்பு செயலராக நியமனம் செய்யப்பட்ட பீட் ஹெக்சேத் தானும் குறிவைக்கப்பட்டதை பின்னர் உறுதிப்படுத்தினார்.
ஆனால் தேர்தல் பரப்புரையின் போது இருமுறை படுகொலை தாக்குதலில் இருந்து தப்பிய டொனால்டு ட்ரம்புக்கு தற்போது மிரட்டல் ஏதும் விடுக்கப்படவில்லை என்றே அதிகாரிகள் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளியான தகவலின்படி, இந்த வாரம் குறிவைக்கப்பட்டவர்கள் யாரும் அமெரிக்க இரகசிய சேவையின் பாதுகாப்பு வட்டத்தில் இல்லை என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகளை முன்னெடுத்தவர்கள் தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றே அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |