ட்ரம்பின் அறிவிப்பு... ஆட்டம் கண்ட கனடாவின் பங்குச்சந்தை
கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து பொருட்கள் மீதான 25 சதவிகித வரிகள் செவ்வாய்கிழமை முதல் அமலுக்கு வரும் என டொனால்ட் ட்ரம்ப் உறுதி செய்துள்ளார்.
900 பில்லியன் டொலர்
ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவு வட அமெரிக்காவை ஒரு பிராந்திய வர்த்தகப் போருக்கு தள்ளியுள்ளதுடன் பங்குச் சந்தைகளை தள்ளாடச் செய்துள்ளது.
கனடா மற்றும் மெக்சிகோ மீதான வரி விதிப்பில் ட்ரம்ப் உறுதியாக இருக்கிறார் என திங்களன்று தகவல் வெளியான நிலையில் மெக்சிகன் பெசோ மற்றும் கனடிய டொலர் இரண்டும் சரிவை எதிர்கொண்டன.
அமெரிக்காவுக்குள் ஃபெண்டானில் வருகையைத் தடுப்பதன் மூலம் வரி விதிப்புகளைத் தவிர்க்கும் ஒரு ஒப்பந்தத்திற்கு இனி வாய்ப்பில்லை என்றே ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே 10 சதவிகித வரி விதிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது 20 சதவிகிதம் என சீனாவுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளார்.
இந்த நிலையில், 900 பில்லியன் டொலர் மதிப்புள்ள வருடாந்திர அமெரிக்க இறக்குமதிகளை உள்ளடக்கிய கனடா மற்றும் மெக்சிகோ மீதான ட்ரம்பின் வரி விதிப்பு, வட அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு கடுமையான பின்னடைவை ஏற்படுத்தும் என தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இரு நாடுகளுக்கும் பாதிப்பு
இந்த நிலையில், 107 பில்லியன் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்கள் மீது 25 சதவிகிதம் வரி விதிக்க இருப்பதாக கனடாவும் பதிலடி அளித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் வரி விதிப்பு அமுலுக்கு வரும் அதே வேளையில், 30 பில்லியன் கனடா டொலர் மதிப்பிலான பொருட்கள் மீதும் வரி விதிக்கப்படும் எனவும் எஞ்சிய 125 பில்லியன் கனேடிய டொலர் மதிப்பிலான பொருட்கள் மீது அடுத்த 21 நாட்களில் வரி விதிப்பு அமுலில் வரும் என்றும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இதனிடையே அமெரிக்காவின் வரி விதிப்பும் கனடாவின் பதிலடியும் இரு நாடுகளுக்கும் பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும் என ஒன்ராறியோ முதல்வர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மிச்சிகன் கார் ஆலைகள் ஒரு வாரத்திற்குள் மூடப்பட்டுவிடும், மேலும் நிக்கல் ஏற்றுமதி மற்றும் ஒன்ராறியோவிலிருந்து அமெரிக்காவிற்கு எல்லை தாண்டிய மின்சாரம் அனுப்புவதை நிறுத்த இருப்பதாக டக் ஃபோர்டு தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |