ட்ரம்பால் எழுந்த புதிய நெருக்கடி... சிசேரியன் கோரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
அமெரிக்காவில் அமுலில் இருக்கும் பிறப்புரிமை குடியுரிமை சட்டம், புதிதாக பொறுப்பேற்றிருக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தால் ரத்து செய்யப்படும் நிலையில் சிசேரியன் கோரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
22 மாகாணங்கள்
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், தாம் பொறுப்பேற்றுக்கொண்ட முதல் நாளிலேயே 127 ஆண்டுகளாக அமுலில் இருக்கும் பிறப்புரிமை குடியுரிமை சட்டத்தை ரத்து செய்வதாக நிர்வாக ஆணையை வெளியிட்டார்.
பெற்றோரில் இருவருக்குமே அமெரிக்காவில் குடியுரிமை இல்லாவிட்டாலும், அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமையை உறுதி செய்யும் அரசியலமைப்புத் திருத்த சட்டத்தையே டொனால்டு ட்ரம்ப் ரத்து செய்ய உள்ளார்.
ஆனால் ட்ரம்பின் நிர்வாக உத்தரவுக்கு ஏற்கனவே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதுடன் 22 மாகாணங்கள் மற்றும் சிவில் உரிமைகள் குழுக்கள் தனித்தனியாக வழக்குகளும் தாக்கல் செய்துள்ளன.
இது ஒருவகை சட்டவிரோத குடியேற்றம் என்றே ட்ரம்ப் வாதிடுகிறார். ட்ரம்பின் இந்த திடீர் நெருக்கடியை அமெரிக்காவில் தற்காலிக H1B அல்லது L1 விசாக்களில் தங்கியிருக்கும் இந்தியர்கள் உணர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த இரு விசாக்களும் நிரந்தர வதிவிட உரிமையை வழங்குவதில்லை. இந்த நிலையிலேயே அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள், இதுபோன்ற விசாக்களில் உள்ள, சிசேரியன் அறுவை சிகிச்சை கேட்கும் கர்ப்பிணி இந்தியப் பெண்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவதாகக் கூறுகின்றனர்.
அதாவது ட்ரம்பின் நிர்வாக உத்தரவு பிப்ரவரி 20ம் திகதி அமுலுக்கு வரும் நிலையில், அந்த திகதிக்கு முன்பு பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படும், ஆனால் பின்னர் பிறந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது என்பதால் இந்த அவசரம் என்றே கூறப்படுகிறது.
சிசேரியன் அறுவை சிகிச்சை
இருப்பினும், ஒரு பெரிய நிபந்தனை என்பது குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது ஏற்கனவே குடிமகனாகவோ அல்லது கிரீன் கார்டு வைத்திருப்பவராகவோ இருந்தால் மட்டுமே பிப்ரவரி 21ம் திகதிக்கு பின்னர் பிறக்கும் குழந்தைகள் குடிமக்களாக மாறுவார்கள்.
நியூ ஜெர்சியைச் சேர்ந்த டாக்டர் எஸ்.டி. ரோமா கூறுகையில், சிசேரியன் அறுவை சிகிச்சை கோரும் பெரும்பாலான பெண்கள் கர்ப்பத்தின் எட்டாவது அல்லது ஒன்பதாவது மாதத்தில் உள்ளனர் என தெரிவித்துள்ளார். 7 மாத கர்ப்பிணி ஒருவரும் தொடர்புடைய மருத்துவரை நாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்னொரு மருத்துவர் SG Mukkala தெரிவிக்கையில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 15 முதல் 20 தம்பதிகளிடம் சிசேரியன் அறுவை சிகிச்சை தொடர்பில் உரையாடியதாக தெரிவித்துள்ளார்.
இந்த பீதி என்னவென்றால், அமெரிக்காவில் H1B அல்லது L1 விசாக்களில் உள்ள இந்தியர்கள் பல லட்சம் பேர் உள்ளனர். அங்கே பல தசாப்தங்களாக வசித்து, குழந்தைகளைப் பெற்று, அவர்கள் தானாகவே அமெரிக்க குடிமக்களாகிவிடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தார்.
ஆனால் தற்போது அந்தக் கதவு ட்ரம்பின் வருகையால் மொத்தமாக கலைந்துவிடும் நிலையில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |