ட்ரம்ப் மீதான குற்றவியல் வழக்குகள் கைவிடப்படும்... வெளிவரும் புதிய தகவல்
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்கும் முன்னர் அவர் மீதான இரு முக்கியமான வழக்குகள் கைவிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வழக்குகளை கைவிட
மொத்தமுள்ள 538 ஆசனங்களில் 280ஐ கைப்பற்றி, அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்கவிருக்கிறார். ட்ரம்புக்கு எதிராக போட்டியிட்ட கமலா ஹரிஸ் 224 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.
இந்த நிலையில் சிறப்பு அரசு சட்டத்தரணி ஜாக் ஸ்மித் முன்னெடுத்த ட்ரம்புக்கு எதிரான இரு முக்கியமான வழக்குகளை கைவிட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
டொனால்டு ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களில் ஜாக் ஸ்மித் குறித்த தகவலை தெரிவித்துள்ளார். ஜனவரி 6ம் திகதி கலவரத்தை மூட்டிய விவகாரம் மற்றும் அரசாங்க ரகசிய ஆவணங்கள் தொடர்பிலான வழக்கு ஆகிய இரண்டும் கைவிட நீதித்துறையுடன் ஆலோசித்து வருவதாக ஜாக் ஸ்மித் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முடிவால், அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பில் இருக்கும் ஒருவர் நீதி விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த முடிவானது ஜாக் ஸ்மித்துக்கு மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ட்ரம்ப் ஏற்கனவே மிரட்டல்
மூன்று ஆண்டுகள் முன்னெடுத்த போராட்டம், மக்கள் வரிப்பணத்தில் சுமார் 35 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது, இருப்பினும் ஜாக் ஸ்மித் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் நியூயார்க்கில் நிதி முறைகேடு வழக்கில் அடுத்த மாதம் ட்ரம்ப் விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார். வாஷிங்டனில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் டிரம்ப் நான்கு வழக்குகளை எதிர்கொள்கிறார்.
தேர்தலில் மோசடி செய்ததாக பொய்யான தகவல்களை பரப்பியதாக ட்ரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2021ல் ஜனாதிபதி பொறுப்பில் இருந்து விலகியுள்ள நிலையில், புளோரிடாவில் உள்ள ட்ரம்பின் குடியிருப்பில் இருந்து அரசாங்க ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட வழக்கும் விசாரணையில் உள்ளது.
ஆனால், ஜனாதிபதியாக பொறுப்புக்கு வந்த அடுத்த நொடி அரசு சட்டத்தரணியான ஜாக் ஸ்மித்தின் பதவியை பறிப்பேன் என ட்ரம்ப் ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்தார். ஜாக் ஸ்மித் பதவி பறிக்கப்பட்டால், அவர் தொடர்ந்த வழக்குகளும் கைவிடப்படும் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |