ஆவணப்படம் வெளியிட்ட BBC... 1 பில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
ஆவணப்படம் ஒன்றில் ஜனாதிபதி ட்ரம்பின் உரையைத் திருத்தியதாக குறிப்பிட்டு, BBC செய்தி நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
திரும்பப் பெற வேண்டும்
நவம்பர் 14 ஆம் திகதிக்குள் தொடர்புடைய ஆவணப்படத்தை முழுமையாகவும் நியாயமாகவும் திரும்பப் பெற வேண்டும் என்று ட்ரம்பின் சட்டக் குழு BBC செய்தி நிறுவனத்திற்கு காலக்கெடு விதித்துள்ளது.

அல்லது 1 பில்லியன் டொலர் இழப்பீடு கோரப்படும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது. ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த 2021 ஜனவரி 6 ஆம் திகதி நடத்திய மிக முக்கியமான உரையை BBC செய்தி நிறுவனம் இரண்டாகப் பிரித்து, மக்களை குழப்பும் வகையில் ஆவணப்படமாக வெளியிட்டதாகவே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதாவது, தேர்தல் தோல்விக்குப் பிறகு, அமெரிக்க நாடாளுமன்றத் தாக்குமாறு அவர் தமது தீவிர ஆதரவாளர்களை வெளிப்படையாக வற்புறுத்திக் கொண்டதாகவே அந்த ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் BBC செய்தி நிறுவனத் தலைவர் சமீர் ஷா நேற்று, மன்னிப்பு கேட்டார். மட்டுமின்றி, அதன் இயக்குநர் ஜெனரல் டிம் டேவி மற்றும் செய்தித் தலைவர் டெபோரா டர்னஸ் இருவரும் ராஜினாமா செய்தனர்.

பெருந்தொகை இழப்பீடு
இந்த நிலையில், BBC செய்தி நிறுவனத்திற்கு ஜனாதிபதி ட்ரம்பின் சட்டக்குழு அளித்துள்ள கடிதத்தில், நவம்பர் 14 ஆம் திகதிக்குள் தொடர்புடைய ஆவணப்படத்தை நீக்காவிட்டால், ஜனாதிபதி ட்ரம்பிற்கு தனது சட்ட மற்றும் சம உரிமைகளை அமுல்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் 1 பில்லியன் டொலர் இழப்பீடு கோரவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே, அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், ட்ரம்ப் பிரித்தானியாவில் அல்ல புளோரிடாவில் பிபிசி மீது வழக்குத் தொடரத் தயாராகி வருகிறார் என்றே கூறப்படுகிறது.

ட்ரம்பை பொறுத்தமட்டில், இதற்கு முன்னரும் பல செய்தி நிறுவனங்களில் இருந்து பெருந்தொகை இழப்பீடு பெற்றுள்ளார். இந்த நிலையில், BBC செய்தி நிறுவனத் தலைவர் சமீர் ஷா தெரிவிக்கையில், ட்ரம்ப் ஒரு வழக்குத் தொடரும் நபர், எனவே நாம் அனைத்து விளைவுகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
மேலும், திருத்தப்பட்ட ஆவணப்படத்திற்காக பொதுமக்களிடம் இருந்து 500 புகார்கள் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |