பிரித்தானியா கைவிட்ட திட்டத்தை செயல்படுத்த முடிவெடுக்கும் டொனால்டு ட்ரம்ப்
பிரித்தானியாவில் ரிஷி சுனக் அரசாங்கம் உருவாக்கிய திட்டம் ஒன்றை தற்போது அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்டு ட்ரம்ப் செயல்படுத்த உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டம்
குறித்த திட்டமானது பிரித்தானியாவின் தற்போதைய கெய்ர் ஸ்டார்மர் அரசாங்கத்தால் கைவிடப்பட்டது. ஆனால் அந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவரும் சாத்தியங்கள் தொடர்பில் டொனால்டு ட்ரம்ப் அணி தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது சட்டவிரோத புலம்பெயர் மக்களை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டம் குறித்தே ட்ரம்ப் அணி ஆய்வு மேற்கொண்டுள்ளது. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சட்டவிரோத புலம்பெயர் மக்களை கட்டாயம் வெளியேற்றுவேன் என்றே ட்ரம்ப் பரப்புரை செய்து வந்தார்.
ஆனால், சுமார் 20 மில்லியன் புலம்பெயர் மக்களை அவர் எவ்வாறு வெளியேற்றுவார் என்ற கேள்வி பல தரப்பில் இருந்தும் எழுந்துள்ளது. இந்த நிலையில் தான், முன்னர் ரிஷி சுனக் அரசாங்கம் முன்னெடுத்த ருவாண்டா திட்டத்தை ட்ரம்ப் அணி பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.
ட்ரம்பின் அணியினரும் அதை உறுதி செய்துள்ளனர். சட்டவிரோத குடியேற்றத்தை முறியடிக்கும் வாக்குறுதியின் மீது டிரம்ப் பரப்புரை மேற்கொண்டார். தற்போது அவர் அதை கடைபிடிக்க உறுதியாக இருக்கிறார் என குறிப்பிட்டுள்ளனர்.
தெற்கு எல்லையை மூடுவார்
ருவாண்டா மட்டுமின்றி, இன்னும் சில நாடுகளில் சட்டவிரோத புலம்பெயர் மக்களை நாடுகடத்தும் திட்டத்தையும் ட்ரம்ப் செயல்படுத்த உள்ளார். ஆனால், ரிஷி சுனக் அரசாங்கம் எதிர்கொண்ட சட்ட சிக்கல்களை ட்ரம்ப் அரசாங்கமும் இந்த விவகாரத்தில் எதிர்கொள்ள நேரிடும் என்றே கூறப்படுகிறது.
ஜனவரி மாதம் ட்ரம்ப் பொறுப்புக்கு வந்ததும் பல்வேறு நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திடுவார் எனவும், அவற்றில் மிகவும் முதன்மையானது எல்லையை மூடுவதாகும் என்றும் தகவல் கசிந்துள்ளது.
மேலும், ஜனவரி மாதத்திலேயே அவர் தெற்கு எல்லையை தற்காலிகமாக மூடுவார் என்றும், இது குவிந்து கிடக்கும் புகலிடக் கோரிக்கை மனுக்களை விசாரிக்க அதிகாரிகளுக்கு வாய்ப்பளிக்கும் என்கிறார்கள்.
ஜோ பைடன் நிர்வாகம் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்களை சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதித்ததாக டிரம்ப் கூறுகிறார். இதனால் சட்டவிரோத புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை தற்போது 20 மில்லியனை எட்டியுள்ளது என்றும் ட்ரம்பின் கூற்றாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |