வரி விதிப்பு விவகாரம்: பிரித்தானியாவை ஏமாற்றிய ட்ரம்ப்
கனடா முதல் பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரிகள் விதித்து வருகிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் அமெரிக்கா சென்று ட்ரம்பை சந்தித்தபின், பிரித்தானியா வரி விதிப்பிலிருந்து தப்பலாம் என்னும் ஒரு நம்பிக்கை உருவாகியிருந்தது. ஆனால், பிரித்தானியாவை ஏமாற்றிவிட்டார் ட்ரம்ப்!
பிரித்தானியாவை ஏமாற்றிய ட்ரம்ப்
ஆம், பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் ட்ரம்பை நேரில் சந்தித்துப் பேசியபோது, பிரித்தானியா மீது வரி விதிக்கவேண்டாம் என ஸ்டார்மர் வற்புறுத்த முயன்றாரா என ஊடகவியலாளர்கள் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதிலளித்த ட்ரம்ப், ஆம், அவர் கடினமான முயற்சி செய்தார், அதற்கான பலனையும் பெற்றுக்கொண்டார் என்றார்.
அத்துடன், இந்த இரண்டு சிறந்த நண்பர்களும், அதாவது, அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஒரு சிறந்த வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளும் என நினைக்கிறேன்.
அப்படி ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும் பட்சத்தில், வரி விதிப்புகளுக்கான அவசியமே இல்லாமல் போய்விடும் என நான் நினைக்கிறேன், பார்க்கலாம் என்றும் கூறியிருந்தார் ட்ரம்ப்.
ஆனால், அன்று அப்படிச் சொல்லிவிட்டு, இப்போது பிரித்தானியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீது 25 சதவிகித கூடுதல் வரிகள் விதித்துள்ளார் ட்ரம்ப்.
இந்நிலையில், ட்ரம்பின் நடவடிக்கை ஏமாற்றமளிப்பதாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்.
என்றாலும், பழிக்குப் பழி நடவடிக்கை எதையும் எடுக்கப்போவதில்லை என்றும், அமெரிக்காவுடன் பொருளாதார ஒப்பந்தம் ஒன்று குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தவே விரும்புவதாகவும் பிரித்தானிய தரப்பு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |