பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் யாருக்கு ஆதரவு? வெளியான முக்கிய தகவல்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தீவர வலதுசாரி வேட்பாளர் எரிக் ஜெம்மரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்.
தற்போது பிரான்ஸ் ஜனாதிபதியாக இருக்கும் மக்ரோனின் பதவிக்காலம் 2022 மே 13ம் திகதியுடன் முடிவடைகிறது.
எனவே பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று 2022 ஏப்ரல் 10ம் திகதி நடைபெறவிருக்கிறது. 2வது சுற்று 2022 ஏப்ரல் 24ம் திகதி நடைபெறவுள்ளது.
முதல் சுற்றில் எந்த ஒரு வேட்பாளருக்கும் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காவிட்டால், அதாவது 50 சதவித வாக்குகளுக்கு மேல் பெறவிட்டால், 2வது சுற்று தேர்தல் நடைபெறும்.
முதல் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வேட்பாளர்கள் மட்டும் 2வது சுற்றில் போட்டியிடுவார்கள், மற்ற வேட்பாளர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
இந்நிலையில், திங்கட்கிழமை பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தீவர வலதுசாரி வேட்பாளர் எரிக் ஜெம்மரிடம், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் சுமார் 40 நிமிடங்கள் தொலைபேசியில் பேசியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஜெம்மர் கூறியதாவது, எனது கருத்தியலில் உறுதியாகவும் உண்மையாகவும் இருக்கும் படி டிரம்ப் என்னிடம் கூறினார்.
நான் நானாகவே இருக்க வேண்டும் எனவும், ஊடகங்கள் என்னை மோசமானவர் என்று அழைக்கும், ஆனால் நான் எனக்கு உண்மையாக இருப்பதே முக்கியமானது என்று அவர் என்னிடம் கூறினார்.
இரு நாடுகளும் நாகரிகப் போரை எதிர்கொண்டதாக குறிப்பிட்ட டிரம்ப், ஒரு நாடுகளும் ஒரே மாதிரியான சிந்தனைகளை கொண்டுள்ளதாகவும், அதாவது அமெரிக்கா அமெரிக்காவாக இருக்க வேண்டும் மற்றும் பிரான்ஸ் பிரான்சாக இருக்க வேண்டும் என்று டிரம்ப் தன்னிடம் கூறியதாக ஜெம்மர் தெரிவித்தார்.
இருவரும் குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் அந்தந்த நாடுகளின் பொருளாதாரம் குறித்து விவாதித்தனர் என்று ஜெம்மரின் பிரச்சாரக் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.