சுவிட்சர்லாந்துக்கு தப்ப முயன்ற டிரம்ப் ஆதரவாளர்: ரத்த காயங்களுடன் கைது
அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட கலவரத்தில் தொடர்புடைய நபர் சுவிட்சர்லாந்துக்கு தப்ப முயன்ற நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கை மற்றும் தொடைகளில் ரத்த காயங்களுடன் காணப்பட்ட அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜனவரியில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களில் ஜெஃப்ரி சபோல் என்பவரும் ஒருவர்.
சம்பவத்தன்று காயமடைந்த கலவரக்காரர்களுக்கு உதவிய பொலிசாரை மூர்க்கத்தனமாக தாக்கியவர் இந்த ஜெஃப்ரி சபோல்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை துவங்கும் முன்னர் பெடரல் நீதிபதி இவரை சிறைக்கு அனுப்பியுள்ளார்.
ஜெஃப்ரி சபோல் அமெரிக்காவில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு தப்ப முயன்ற காரணத்தாலையே, தற்போது விசாரணைக் கைதியாக சிறையில் உள்ளார்.
நாடாளுமன்ற கலவரத்திற்கு பின்னர் கொலராடோவில் உள்ள தனது வீட்டிலிருந்து பாஸ்டனுக்குச் சென்று அங்கிருந்து சுவிட்சர்லாந்திற்கு விமானத்தை முன்பதிவு செய்திருந்தார்.
சுவிட்சர்லாந்தில் தமக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றே அவர் நம்பியுள்ளார். இந்த நிலையில், விமான நிலையத்தில் சட்ட அமலாக்க அதிகாரிகளை காண நேர்ந்த அவர், தமது திட்டத்தை மாற்றிக்கொண்டதுடன் வாடகை டாக்ஸி ஒன்றில் தப்ப முயன்றுள்ளார்.
ஆனால் சந்தேகத்தின் அடிப்படையில் கிளார்க்ஸ்டவுன், நியூயார்க்கில் வைத்து அவரை கைது செய்துள்ள பொலிசார், விசாரணையில் அவர் நாடாளுமன்ற கலவரத்தில் பொலிசாரை தாக்கிய நபர் என்பதை கண்டறிந்தனர்.
இதுபோன்ற ஒருவரை வெளியே நடமாட விடுவது, மிகவும் ஆபத்தான முடிவு என கூறியுள்ள நீதிபதி, விசாரணை முடியும் மட்டும் அவரை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.