அமெரிக்கா போன்று முடிவெடுத்த ஜேர்மன் மக்கள்... கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியை பாராட்டிய ட்ரம்ப்
ஜேர்மன் மக்களும் அமெரிக்கா போன்றே முடிவெடுத்துள்ளதாக கன்சர்வேட்டிவ் கட்சியின் வெற்றியை ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.
எதிர்பார்க்கப்பட்ட வெற்றி
ஜேர்மனி பொதுத்தேர்தல் முடிவுகள் வெளிவரும் நிலையில், ஜேர்மனி மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் ஜனாதிபதி ட்ரம்ப். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜேர்மனியின் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் வெற்றி பெற்றதற்கு ஜனாதிபதி ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அத்துடன் எரிசக்தி மற்றும் குடியேற்றம் போன்ற விடயங்களில் ஜேர்மனியில் உள்ள மக்கள் எவ்வாறு பொது அறிவு இல்லாத பரப்புரைகளால் சோர்வடைகிறார்கள் என்பதையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
ஜேர்மனியில் நடந்த பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி மிகப் பெரிய மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்கா போன்றே இந்த முறை ஜேர்மன் மக்களும் ஒரு மாற்றத்திற்கான முடிவை எடுத்துள்ளனர் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கும் பொதுவானது
கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் ஃபிரெட்ரிக் மெர்ஸின் வெற்றி ஜேர்மனிக்கும் அமெரிக்காவுக்கும் பொதுவானது என்றார். கன்சர்வேட்டிவ் கட்சிகளின் ஆதிக்கம் என்பது ஐரோப்பாவிலும் உலகம் முழுவதிலும் ஒரு பேரலையாக மாறியுள்ளது.
தற்போது தீவிர வலதுசாரிகள் அல்லது இடதுசாரிகளின் அரசுகள் பல ஐரோப்பிய நாடுகளில் ஆட்சியில் இருந்து வருகிறது. ஜேர்மனியில் கன்சர்வேட்டிவ் கட்சியின் ஃபிரெட்ரிக் மெர்ஸ் 28 சதவிகித வாக்குகளை கைப்பற்றியுள்ளார்.
தீவிர வலதுசாரிகளான AfD கட்சி 20 சதவிகித வாக்குகளை கைப்பற்றியுள்ளது. ஆனால் ஓலாஃப் ஷோல்சின் SPD கட்சி 16 சதவிகித வாக்குகளுடன் மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |