அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம்
புலம்பெயர்தல் தொடர்பில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவரும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை என சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்த திட்டம்
ப்ளோரிடாவிலுள்ள புலம்பெயர்ந்தோர் தடுப்புக் காவல் மையம் ஒன்றிற்குச் சென்றிருந்த ட்ரம்ப், ஊடகவியலாளர்கள் முன் பேசினார்.
தனது பேட்டியின்போது, இப்போது அமெரிக்கக் குடிமக்களாக இருக்கும் புலம்பெயர்ந்தோர் பலர், அமெரிக்காவில் பயங்கர குற்றச்செயல்களில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவித்தார் ட்ரம்ப்.
அவர்களில் பலர் அமெரிக்காவில் பிறந்தவர்கள் என்று கூறிய அவர், அவர்களை அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தவேண்டும் என்று கூறினார்.
அதுதான் எனது அடுத்த வேலையாக இருக்கலாம் என்றும் ட்ரம்ப் கூறினார்.
ஆனால், அவர் குறிப்பிட்ட அந்த அமெரிக்காவில் பிறந்த புலம்பெயர்ந்தோர், அமெரிக்கக் குடிமக்கள்! ஆக, அமெரிக்கக் குடிமக்களையே நாடுகடத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.
ஆனால், ட்ரம்பின் திட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
குற்றச்செயல்களில் ஈடுபட்ட அமெரிக்கர்களை நாடுகடத்துவது சட்டப்படியானதா என்பது தனக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ள ட்ரம்ப், அதை சட்டப்படி அறிந்துகொள்ள இருப்பதாகவும், அது சட்டப்படியானதுதான் என தெரியவந்தால் நொடிப்பொழுதில் அதை செய்வேன் என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |