இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க டிரம்ப் எதிர்ப்பு - தமிழ்நாட்டிற்கு பாதிப்பு
இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஐபோன் தயாரிப்பு
அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை தயாரிப்பதில், முதலிடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் வியட்நாமும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் இருக்கின்றன.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்திற்கான ஐபோன் தயாரிப்பில், 14 ஆலைகள் உள்ளன. இதில் 7 ஆலைகள் தமிழ்நாட்டில் உள்ளன.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பு முறையில் சீனா மற்றும் வியட்நாம் அதிக வரிகளை எதிர்கொண்டது.
இதன் காரணமாக ஐபோன் உற்பத்தியை, சீனா மற்றும் வியட்நாமில் இருந்து இந்தியாவிற்கு மாற்ற ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டது.
அமெரிக்காவுக்கான ஐபோன் பெரும்பாலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகவே இனி இருக்கும் என்று ஆப்பிள் சி.இ.ஓ. டிம்குக் அண்மையில் தெரிவித்திருந்தார்.
டிரம்ப் எதிர்ப்பு
இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப், அங்கு கத்தாரில் தோஹா நடைபெற்ற வணிக நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், "ஆப்பிள் சி.இ.ஓ. டிம் குக் அவர்களே உங்களை நாங்கள் மிகவும் நன்றாக நடத்துகிறோம்.
நீங்கள் சீனாவில் பல ஆண்டுகளாக கட்டிய அனைத்து ஆலைகளையும் நாங்கள் பொறுத்துக்கொண்டோம். நீங்கள் இந்தியாவில் கட்டுவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை.
இந்தியாவின் நலன் குறித்து நீங்கள் எண்ணினால், அங்கு நீங்கள் தொழிற்சாலை அமைக்கலாம். ஆனால், உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. அங்கே அமெரிக்க பொருட்களை விற்பனை செய்வது கடினம்.
இந்தியா அமெரிக்கா பொருட்கள் மீது எந்த வரியும் போடமாட்டோம் என்று கூறியுள்ளது. அதனால் நீங்கள் அமெரிக்காவில் உங்களது ஆலைகளை கட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.
ஐபோன் தயாரிப்பால், இந்தியாவின் மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ள நிலையில், டிரம்ப்பின் இந்த முடிவு தமிழ்நாட்டை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |