நாடொன்றின் மீது இராணுவ நடவடிக்கைக்கு தயாராக பென்டகனுக்கு உத்தரவிட்ட ட்ரம்ப்
நைஜீரியாவில் சாத்தியமான இராணுவ நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்குமாறு பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பெருமளவில் படுகொலை
கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க நைஜீரியா நிர்வாகம் போதுமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்று ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

ஆனால் ட்ரம்பின் குற்றச்சாட்டுகளை நைஜீரியா தொடர்ந்து மறுத்து வருகிறது. சமூக ஊடகப் பதிவு ஒன்றில், நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் பெருமளவில் படுகொலை செய்யபப்டுவதாக குறிப்பிட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், நைஜீரியாவுக்கான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் அமெரிக்கா உடனடியாக நிறுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அங்குள்ள அரசாங்கத்தை விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் எச்சரித்துள்ளார்.
நைஜீரியாவிற்குள் புகுந்து இந்தக் கொடூரமான அட்டூழியங்களைச் செய்யும் இஸ்லாமிய பயங்கரவாதிகளை முற்றிலுமாக அழிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
230 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நைஜீரியாவில் தீவிர இஸ்லாமிய அமைப்புகளின் தாக்குதல்களுக்கு கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் பலியாகி வருகின்றனர்.

ஆனால், நாட்டில் வன்முறை சம்பவங்களுக்கு பல்வேறு காரணிகளை குறிப்பிடுகின்றனர். சில சம்பவங்கள் மத ரீதியாக தூண்டப்பட்டு இரு தரப்பினர்களையும் பாதிக்கின்றன.
கவலைக்குரிய நாடாக
மற்ற சில சம்பவங்கள் விவசாயிகளுக்கும் மேய்ப்பர்களுக்கும் இடையிலான வரையறுக்கப்பட்ட வளங்கள் தொடர்பான மோதல்களாலும், வகுப்புவாத மற்றும் இனப் பதட்டங்களாலும் எழுகின்றன.
ஆனால் குறிவைக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் கிறிஸ்தவர்களாகவே உள்ளனர். இந்த நிலையில், நைஜீரியா மத சுதந்திர மீறல்களில் ஈடுபட்டதாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார். நைஜீரியாவில் கிறிஸ்தவம் இருத்தலியல் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது என்றும் குறிப்பிட்டார்.

மட்டுமின்றி, சர்வதேச மத சுதந்திரச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட கவலைக்குரிய நாடாக நைஜீரியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்றும் ட்ரம்ப் கோரிக்கை வைத்தார்.
ஆனால், நைஜீரியாவை மத ரீதியாக சகிப்புத்தன்மையற்ற நாடாக சித்தரிப்பது எங்களது தேசிய யதார்த்தத்தை பிரதிபலிக்கவில்லை என்றும், அனைத்து நைஜீரியர்களுக்கும் மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கைகளைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் நிலையான மற்றும் நேர்மையான முயற்சிகளையும் இது கருத்தில் கொள்ளவில்லை என்றும் நைஜீரிய ஜனாதிபதி போலா டினுபு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |