அந்த நாட்டவர்களை அமெரிக்க நகரை விட்டு வெளியேற்றுவேன்... டொனால்டு ட்ரம்ப் மீண்டும் சூளுரை
ஓஹியோ நகரமான ஸ்பிரிங்ஃபீல்டில் இருந்து ஹெய்தி புலம்பெயர் மக்களை பெருமளவில் நாடு கடத்த இருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சூளுரைத்துள்ளார்.
நடவடிக்கை பாயும்
அமெரிக்காவில் பெரும்பாலான ஹெய்தி மக்கள் சட்டப்பூர்வமாகவே நுழைந்துள்ளனர் என்ற போதும் நடவடிக்கை பாயும் என்றே கூறப்படுகிறது.
ஹெய்தி புலம்பெயர் மக்கள் ஸ்பிரிங்ஃபீல்டு பகுதியில் உள்ள குடியிருப்புகளில் உள்ள செல்லப்பிராணிகளை சாப்பிடுவதாக தீவிர வலதுசாரிகள் முன்வைத்த குற்றச்சாட்டு சமூக ஊடக பக்கங்களில் பெரும் விவாததை ஏற்படுத்தியது.
மட்டுமின்றி, நேரலை விவாதத்தின் போது முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பும் இதையே குற்றச்சாட்டாக முன்வைத்ததுடன், தற்போது பத்திரிகையாளர் சந்திப்பின் போதும், ஸ்பிரிங்ஃபீல்டு பகுதியில் உள்ள ஹெய்தி மக்களை வெளியேற்றுவது உறுதி என தெரிவித்துள்ளார்.
ஸ்பிரிங்ஃபீல்டு பகுதியில் உள்ள சுமார் 15,000 ஹெய்தி மக்களில் பெரும்பாலானோர் சட்டத்திற்கு உட்பட்டு அமெரிக்காவில் குடியேறியவர்கள். ஆனால் சட்டவிரோத குடியேறிகளை கட்டாயம் வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.
அமெரிக்காவை மீண்டும் பெருமைமிகு நாடாக மாற்ற இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம் என்றும் கூறி வருகிறார். மேலும், செவ்வாய்க்கிழமை நடந்த நேரலை விவாதத்தின் போது ட்ரம்ப் குறிப்பிட்ட நாய்களையும் பூனைகளையும் புலம்பெயர் மக்கள் உணவாக்குவதாக குறிப்பிட்டதை அவர் மீண்டும் பதிவு செய்யவில்லை.
மக்களை ஆபத்தில் தள்ளலாம்
மாறாக புலம்பெயர் மக்களை ஸ்பிரிங்ஃபீல்டு பகுதியில் இருந்து வெளியேற்ற இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் ஸ்பிரிங்ஃபீல்டு பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் ஜோ பைடன் நிர்வாகம் பல ஆயிரம் ஹெய்தி மக்களுக்கு தற்காலிக பாதுகாக்கப்பட்ட நிலையை அளித்தது. ஹெய்தியில் நடந்த உள்ளூர் மோதல்களால் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்.
தற்போது டொனால்டு ட்ரம்பின் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டானது மக்களை ஆபத்தில் தள்ளலாம் என்றும் ஸ்பிரிங்ஃபீல்டில் பதட்டங்களை மேலும் உருவாக்கலாம் என அமெரிக்கா முழுவதும் உள்ள ஹெய்தி சமூகத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |