20 மாதங்களில் 300,000 விசாக்களை ரத்து செய்த ட்ரம்ப் நிர்வாகம்
Trump Administration Has Revoked Over 3,00,000 Visas: ட்ரம்ப் நிர்வாகம் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட விசாக்களை ரத்து செய்துள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் தனது இரண்டாவது பதவிக் காலத்தில் 300,000 அமெரிக்க விசாக்களை ரத்து செய்துள்ளது என்று வெளிவிவகார அமைச்சகம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
விசா ரத்து
சமீபத்திய வாரங்களில் விசா ரத்து செய்யப்படும் வேகத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதையும் இந்த எண்ணிக்கை காட்டுகிறது. ஆகஸ்ட் 10 அன்று வெளியிடப்பட்ட தரவுகளில், 2025 ஜனவரியில் ட்ரம்ப்பின் தற்போதைய பதவிக்காலம் தொடங்கியதிலிருந்து ரத்து செய்யப்பட்ட விசாக்களின் எண்ணிக்கை 1,75,000-க்கும் அதிகம் என்று வெளிவிவகரத்துறை தெரிவித்துள்ளது.

தனது குடியேற்றக் கட்டுப்பாடுகள் மற்றும் நாடு கடத்தும் நடவடிக்கையானது உள்நாட்டுப் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.
ஆனால், இந்த அடக்குமுறை, சட்ட நடைமுறை மற்றும் பேச்சுரிமைகளை மீறியுள்ளதாகவும், குறிப்பாக இனப் பாகுபாடு குறித்துக் கவலைகளை எழுப்பியுள்ள இனச் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, அமெரிக்க வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் கூறுகையில், ட்ரம்ப் நிர்வாகமானது வரலாற்றில் எந்தவொரு நிர்வாகத்தையும் விட அதிக எண்ணிக்கையிலான விசாக்களை, மிக வேகமான விகிதத்தில் ரத்து செய்துள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், விசா மூலம் அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் சட்டத்தை மீறினாலோ, மோசடியில் ஈடுபட்டாலோ அல்லது அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு ஊறு விளைவித்தாலோ, அத்தகைய செயல்களை நிர்வாகம் துளியும் பொறுத்துக்கொள்ளாது என்று பிகோட் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஆர்வலர்களால் குறிப்பாகக் கண்டிக்கப்பட்ட விசா ரத்துகளில், அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேல் காஸா மீது நடத்தும் தாக்குதல்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய பாலஸ்தீன ஆதரவு வெளிநாட்டுப் போராட்டக்காரர்களின் விசா ரத்து மற்றும் கன்சர்வேட்டிவ் வர்ணனையாளர் சார்லி கிர்க்கின் படுகொலை குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த வெளிநாட்டினரின் விசா ரத்து ஆகியவை அடங்கும்.
தேசிய பாதுகாப்பு
வெளிநாட்டுப் போராட்டக்காரர்களை நாடு கடத்துவதற்கான முயற்சிகளுக்கு மேலதிகமாக, குடியேறியவர்கள் மற்றும் விசா விண்ணப்பதாரர்களின் சமூக ஊடகச் செயல்பாடுகளைக் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தும் நடைமுறையை ட்ரம்ப் நிர்வாகம் அமுல்படுத்தியுள்ளது.

மேலும், விமர்சகர்களை குறிவைக்க தேசிய பாதுகாப்பு காரணங்களை அரசாங்கம் பயன்படுத்தியுள்ளது மற்றும் மினசோட்டாவில் உள்ள சோமாலி அமெரிக்க சமூகம் போன்ற புலம்பெயர்ந்த சமூகங்களை பரவலாக குறிவைக்க தனிமைப்படுத்தப்பட்ட மோசடி வழக்குகளை பயன்படுத்தியுள்ளதாக மனித உரிமைகள் சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.
2024-ஆம் ஆண்டுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதாக ட்ரம்ப் உறுதியளித்த அதே வேளையில், அவரது நிர்வாகம் சட்டப்பூர்வ குடியேற்றத்தையும் மேலும் கடினமாக்கியுள்ளது.