ஆப்பிளை தொடர்ந்து சாம்சங் நிறுவனத்திற்கும் வரி அச்சுறுத்தல்: டிரம்ப் எச்சரிக்கை
டிரம்பின் பாதுகாப்புவாத நிலைப்பாடு தொழில்நுட்ப ஜாம்பவான்கள் மீது வரி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்திற்கு அச்சுறுத்தல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தி குறித்து கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஐபோன்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்படாவிட்டால், 25% வரி விதிக்கப்படலாம் என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை குறைத்து, அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் டிரம்ப் ஆப்பிளை வெளிப்படையாக வலியுறுத்தினார்.
"இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ தயாரிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு ஐபோன்கள் அனுப்பப்படுவதை நான் விரும்பவில்லை," என்றும் தெரிவித்தார்.
ஆப்பிளை தொடர்ந்து சாம்சங்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் இந்த வரி அச்சுறுத்தல் ஆப்பிள் நிறுவனத்துடன் நின்றுவிடவில்லை.
ஆப்பிளின் முக்கிய போட்டியாளரான சாம்சங் நிறுவனத்திற்கும் அதிபர் டிரம்ப் தனது எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "வரி விதிப்பு ஆப்பிள் நிறுவனத்திற்கு மட்டுமல்ல, சாம்சங் மற்றும் இது போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் எந்த நிறுவனத்திற்கும் பொருந்தும்.
இல்லையெனில், அது நியாயமாக இருக்காது. அவர்கள் இங்கு தொழிற்சாலை அமைத்தால், வரி இருக்காது," என்று தெளிவுபடுத்தினார்.
அமெரிக்காவில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்பதையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களை முக்கியமாக வியட்நாம், இந்தியா, தென் கொரியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் உற்பத்தி செய்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |