நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்காது! டொனால்டு டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதியாக தான் இருந்திருந்தால் உக்ரைன் மீது ரஷ்யாவை போர் தொடுக்க அனுமதித்திருக்க மாட்டேன் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
புளோரிடாவில் வியாழக்கிழமை நடைபெற்ற ஹெரிடேஜ் அறக்கட்டளை நிகழ்வில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை கடுமையாக விமர்சித்த அவர், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிகழ்வு ரஷ்யா, சீனா மற்றும் ஈரானின் பார்வையில் வாஷிங்டனை பலவீனமாக காட்டியதாக குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், 'உக்ரைன் மீது படையெடுத்ததின் மூலம் அமெரிக்க தலைவர்களை எந்த அளவுக்கு பலவீனமாக பார்க்கிறோம் என்றும் ரஷ்யா காட்டி விட்டது. டிரம்ப் ஆட்சியில் இருந்திருந்தால் ரஷ்யா இந்த போரை தொடங்கியிருக்க முடியாது. அப்படி அவர்கள் செய்ய சாத்தியமே இல்லை.
இனி சீனா நம்மை மதிக்கப்போவதில்லை, ஈரான் நமக்கு பயப்படாது. ஆப்கானிஸ்தானில் நமது தேசம் அவமானப்படுத்தப்பட்டுள்ளது. நமது நாட்டின் வரலாற்றில் இது மோசமான காலம்' என விமர்சித்தார்.