இந்திய பொருளாதாரத்தை இறந்ததாக விமர்சித்த டிரம்ப் - ஆனால் இங்கு அவர் ஈட்டிய வருமானம் தெரியுமா?
இந்திய பொருளாதாரத்தை இறந்ததாக டிரம்ப் விமர்சித்த நிலையில், அவர் குடும்ப நிறுவனம் இந்தியாவில் ஈட்டி வரும் வருமானம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்திய பொருளாதாரத்தை விமர்சித்த டிரம்ப்
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் ராணுவ தளவாடங்களை இந்தியா வாங்கி வரும் நிலையில், அதை கைவிடுமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார்.
இந்தியா அதை கைவிட மறுத்த நிலையில், இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்ததோடு, இந்தியா மற்றும் ரஷ்யா இறந்த பொருளாதாரம் என விமர்சித்தார்.
இந்நிலையில், இந்தியாவில் டிரம்ப் குடும்பத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் ஈட்டிய வருமானம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
டிரம்ப்பின் குடும்பம், டிரம்ப் என்ற பிராண்டின் கீழ் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் டிரம்ப் பிராண்டின் கீழ் கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் டிரம்ப் நிறுவனம்
இதுவரை, மும்பை, புனே, குர்கிராம், கொல்கத்தா ஆகிய 4 நகரங்களில் 3.5 மில்லியன் சதுரடி பரப்பளவில் டிரம்ப் டவர்கள் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.7500 கோடி என மதிப்பிடப்படுகிறது.
மேலும், புனே, குர்கிராம், நொய்டா, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய 6 நகரங்களில் 8 மில்லியன் சதுரடி பரப்பளவில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மதிப்பு ரூ.15,000 கோடி என மதிப்பிடப்படுகிறது.
டிரம்ப் டவர் என்ற பெயரில் இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டாலும், இதில் ஒரு ரூபாய் கூட டிரம்ப் நிறுவனத்தில் இருந்து முதலீடு செய்யப்படவில்லை.
மாறாக இங்குள்ள நிறுவனங்களுக்கு டிரம்ப் என்ற பிராண்டை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்குகிறது. அதற்கு குறிப்பிட்ட தொகையை லைசென்ஸ் கட்டணமாக, டிரம்ப் நிறுவனம் பெற்றுக்கொள்கிறது.
இந்தியாவில் உள்ள லோதா குழுமம், யூனிமார்க், M3M ஆகிய கட்டுமான நிறுவனங்கள் இந்த கட்டுமானங்களை மேற்கொண்டு வருகிறது.
டிரம்ப் இந்தியாவை இறந்த பொருளாதாரம் என விமர்சித்துள்ள நிலையில், இறந்த பொருளாதாரமாக இருந்தால், இந்தியாவில் எப்படி டிரம்ப் நிறுவனம் வருமானம் ஈட்டி வருகிறது என இந்தியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிறுவனத்திற்கு, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா பெரிய சந்தையாக உள்ளதாக குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |