ஈரான் போர் தொடர்பில் அமெரிக்காவை விமர்சித்த ஜேர்மன் சேன்ஸலர்: ட்ரம்பின் பதிலடி
ஈரான் போர் தொடர்பில் அமெரிக்காவை விமர்சித்த ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸுக்கு ட்ரம்ப் சுடச்சுட பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்காவை விமர்சித்த ஜேர்மன் சேன்ஸலர்
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியபோது, உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்ட நேட்டோ நாடுகளுடன் இணைந்து அமெரிக்காவும் உக்ரைனுக்கு உதவும் என அதன் சக நாடுகள் எதிர்பார்க்க, அமெரிக்கா உதவாமல் விலகிக்கொண்டது.
அமெரிக்காவின் அந்த நடவடிக்கை மொத்த ஐரோப்பாவையும் அதிர்ச்சியடைய வைத்தது.

நாளை நமக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால், நிச்சயம் அமெரிக்கா நமக்கு உதவாது, நாம்தான் நம் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் உருவாக, பல நாடுகள் தங்கள் ராணுவத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கின.
அப்படி ட்ரம்பின் முடிவால் ஏமாற்றமடைந்த நாடுகளில் ஜேர்மனியும் ஒன்று. ஜேர்மன் தன் பாதுகாப்புக்காக தனது ராணுவத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுவருவது அனைவரும் அறிந்ததே.
ஆக, பொதுவாகக் கூறினால், மேல்போக்காக ஜேர்மனி அமெரிக்க உறவுகள் சாதாரணமாக இருப்பதுபோல் தோன்றினாலும், உண்மையில் ஜேர்மனிக்கு அமெரிக்கா மீது வருத்தம் உள்ளது. அது அவ்வப்போது ஜேர்மன் சேன்ஸலரான மெர்ஸின் பேச்சில் வெளிப்பட்டும் விடுகிறது.
இந்நிலையில், ஈரான் போர் தொடர்பில் அமெரிக்கா மீது விமர்சனம் ஒன்றை முன்வைத்தார் மெர்ஸ். ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் தவறான முடிவு என்றும், போரைத் துவக்குவது மட்டுமல்ல, அதை முடிக்கவும் தெரியவேண்டும் என்னும் ரீதியில் கருத்தொன்றை தெரிவித்திருந்தார் மெர்ஸ்.
அத்துடன், தனது பேச்சுவார்த்தை யுக்திகளால் ஈரான் அமெரிக்காவை அவமதிப்பதாகவும் தெரிவித்திருந்தார் மெர்ஸ்.
ட்ரம்பின் பதிலடி
மெர்ஸின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது சமூக ஊடகப் பக்கத்தில் இடுகை ஒன்றை வெளியிட்டுள்ள ட்ரம்ப், ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பது பிரச்சினையில்லை என்று ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் நினைக்கிறார் போலும்.

அவர் என்ன பேசுகிறார் என்பது அவருக்கே தெரியவில்லை. ஈரானிடம் மட்டும் ஒரு அணு ஆயுதம் இருக்குமானால், மொத்த உலகமும் அதனிடம் பிணைக்கைதியாக இருக்கும்.
மற்ற நாட்டு தலைவர்கள் எப்போதோ செய்திருக்கவேண்டிய ஒரு விடயத்தை நான் இப்போது செய்துகொண்டிருக்கிறேன், ஜேர்மனி பொருளாதாரம் முதலான விடயங்களில் இவ்வளவு மோசமாக இருப்பதில் வியப்பேதும் இல்லை என சுடச்சுட பதிலளித்துள்ளார் ட்ரம்ப்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |