முடிவில் மாற்றமில்லை... பிரதமர் ஸ்டார்மரின் கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்த ட்ரம்ப்
புதிய அமெரிக்க வரிகளிலிருந்து பிரித்தானியாவுக்கு விலக்கு வேண்டும் என்ற பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் கோரிக்கையை டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
தீர்வை எட்டவில்லை
புதிய ஏற்றுமதி வரிகளை மாற்றும் புதிய வரையறுக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்த ஜூன் மாதம் பிரித்தானியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் ஸ்டார்மர் அமெரிக்க ஜனாதிபதியை அழைத்திருந்தார்.
ஆனால், அமெரிக்க வரி விதிப்பு உறுதி என்றே தகவல் வெளியாகியுள்ளது. மேலும், திட்டமிடப்பட்ட பொருளாதார ஒப்பந்தத்தின் விவரங்களை ஆராய்வதாக ஜனாதிபதி ட்ரம்ப் உறுதியளித்ததைத் தவிர, இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை எந்த தீர்வையும் எட்டவில்லை என்றே தகவல் கசிந்துள்ளது.
மட்டுமின்றி, இரு நாடுகளுக்கும் இடையே புதிய ஒப்பந்தத்தை எட்டுவதற்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என்று பிரதமர் ஸ்டார்மர் கெஞ்சியதாகவும் தகவல் கசிந்துள்ளது. ஆனால் வெளியான தகவல் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்றே பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது.
பெரும் அடியாகவே
விலக்கு வேண்டும் என பிரதமர் ஸ்டார்மர் நேரிடையாக கோரவில்லை என்றே தெரிவித்துள்ளனர். பிரித்தானியா முன்வைத்துள்ள திட்டங்களின் விவரங்களைப் பார்ப்பதாக ட்ரம்ப் உறுதியளித்துள்ளதாகவும், ஆனால் பேச்சுவார்த்தைகளில் அவர் நேரடியாக ஈடுபடவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து கார்களுக்கும் 25 சதவீதம் இறக்குமதி வரி அறிமுகப்படுத்தப்படும் என்று ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்துள்ளார். இது, ஆஸ்டன் மார்டின்ஸ் மற்றும் ரேஞ்ச் ரோவர்ஸ் போன்ற பிரித்தானியாவின் உயர் ரக கார் உற்பத்திக்கு பெரும் அடியாகவே பார்க்கப்படுகிறது.
பிரித்தானியாவில் தயாரிக்கபப்டும் கார்களில் கிட்டத்தட்ட 17 சதவீதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 8 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான 100,000 க்கும் மேற்பட்ட கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |