5 பில்லியன் டொலர்... BBC-க்கு எதிராக பிடிவாதம் காட்டும் ட்ரம்ப்
பிரித்தானியாவின் BBC செய்தி நிறுவனம் ட்ரம்ப் விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட நிலையிலும், இழப்பீடாக 5 பில்லியன் டொலர் வரை கேட்டு வழக்குத் தொடரப்போவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஒப்புக்கொண்டாலும்
இந்த விவகாரம் தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், நாங்கள் அவர்கள் மீது ஒரு பில்லியன் முதல் ஐந்து பில்லியன் டொலர்கள் வரை வழக்குத் தொடுப்போம், அநேகமாக அடுத்த வாரம் எப்போதாவது அது நடக்கும் என்றார்.

அவர்கள் முறைகேடு செய்துள்ளதை ஒப்புக்கொண்டாலும், வழக்குத் தொடுப்பதில் இருந்து விலகுவதாக இல்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
2021 அமெரிக்க நாடாளுமன்றக் கலவரத்திற்கு முந்தைய உரையின் காணொளி மூலம் ஜனாதிபதி ட்ரம்ப் மீது அவதூறு பரப்பியதாக குற்றம் சாட்டி, ட்ரம்பின் சட்டத்தரணிகள் திங்களன்று BBC நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதில், மன்னிப்பு கோருவதுடன் இழப்பீடும் வழங்க வேண்டும் என்றும் வெள்ளிக்கிழமை வரை அவகாசம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே, BBC நிறுவனத்தால் பிரித்தானிய மக்கள் கோபத்தில் இருப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டார்மர் பார்வைக்கு
உண்மைக்கு புறம்பாக செய்தியை BBC நிறுவனம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, இந்த விவகாரத்தை பிரதமர் ஸ்டார்மர் பார்வைக்கு கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வார இறுதி நாளில் பிரதமர் ஸ்டார்மரை தொலைபேசியில் தொடர்புகொள்ள இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஒளிபரப்பான அந்த ஆவணப்படத்தில், ட்ரம்ப் நேரடியாக வன்முறைக்கு வலியுறுத்தியதாக காட்சிப்படுத்தியதற்கு பிபிசி திங்களன்று மன்னிப்பு கேட்டது.
ட்ரம்பின் உரையை திருத்திய விவகாரத்தில் பிபிசி இயக்குநர் ஜெனரலும் அமைப்பின் உயர் செய்தி நிர்வாகியும் ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |