பிரபல நாளேடு மீது ரூ 86,000 கோடி இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர்ந்த ஜனாதிபதி ட்ரம்ப்
விவாதங்களில் சிக்கிய ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவரின் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில் தனது பெயர் இடம்பெற்றதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட செய்தி தொடர்பாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 10 பில்லியன் டொலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
நற்பெயருக்கு தீங்கு
கடந்த 2003 ஆம் ஆண்டு பகிரப்பட்ட அந்த வாழ்த்துச் செய்தியில் பாலியல் உணர்வைத் தூண்டும் ஓவியமும் அவர்கள் இருவரும் பகிர்ந்து கொண்ட ரகசியங்களைப் பற்றிய குறிப்பும் அடங்கும்.
மியாமி பெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் முர்டோக், டவ் ஜோன்ஸ், நியூஸ் கார்ப் மற்றும் அதன் தலைமை நிர்வாகி ராபர்ட் தாம்சன் மற்றும் இரண்டு வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நிருபர்கள் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மேலும், ஜனாதிபதி ட்ரம்பை அவதூறு செய்ததாகவும், அவருக்கு பெரும் நிதி மற்றும் நற்பெயருக்கு தீங்கு விளைவித்ததாகவும் அந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளனர்.
பல விவாதங்களில் சிக்கிய நிதியாளரும் பாலியல் குற்றவாளியுமான எப்ஸ்டீன், 2019ல் நியூயார்க் சிறைச்சாலையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். எப்ஸ்டீன் வழக்கானது தற்போது ட்ரம்பின் வெறித்தனமான ஆதரவாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மட்டுமின்றி, சமூகத்தில் செல்வந்தர்கள் மற்றும் பலம்பொருந்தியவர்களுடன் எப்ஸ்டீன் கொண்டிருந்த உறவுகளை ட்ரம்ப் அரசாங்கம் மறைப்பதாகவும் நம்பத் தொடங்கியுள்ளனர்.
அவதூறு வழக்கு
ஆனால் 2006 ஆம் ஆண்டு எப்ஸ்டீன் தொடர்பான சட்ட சிக்கல்கள் பகிரங்கப்படுத்தப்படுவதற்கு முன்பே, அவரிடம் இருந்து பிரிந்துவிட்டதாக ட்ரம்ப் கூறி வருகிறார். மேலும், எப்ஸ்டீனுக்கு அனுப்பியதாக கூறப்படும் பிறந்தநாள் வாழ்த்து போலி என குறிப்பிட்டுள்ள அந்த வழக்கில், ட்ரம்பின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அந்த நாளேடு கட்டுரை வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அது போலி என்பதை ட்ரம்ப் தரப்பு நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் தற்போது எழுந்துள்ளது. 10 பில்லியன் டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ 86,187 கோடி) என்பது சமீபத்திய வரலாற்றில் அவதூறு வழக்கு ஒன்றில் மிகப்பெரிய தொகை என்றே கூறுகின்றனர்.
ட்ரம்பின் பெயரைக் கொண்ட கடிதம், எப்ஸ்டீனின் பிறந்தநாள் புத்தகத்தின் ஒரு பகுதியாகும், அதில் மற்ற உயர்மட்ட நபர்களின் செய்திகளும் அடங்கும் என்று ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
1990கள் மற்றும் 2000களின் முற்பகுதியில் சமூக சூழ்நிலைகளில் ட்ரம்ப் எப்ஸ்டீனுடன் பலமுறை புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார், மேலும் புளோரிடாவில் எப்ஸ்டீனின் அண்டை வீட்டாராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |