ட்ரம்பின் வரி விதிப்பு மிரட்டல்... மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்ள தயாராகும் கனேடிய மாகாணம்
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்டு ட்ரம்ப் கனடாவுக்கு வரி விதிப்பு மிரட்டல் விடுத்துள்ள நிலையில், நெருக்கடிகளை எதிர்கொள்ள தயார் என நியூ பிரன்சுவிக் மாகாண முதல்வர் தெரிவித்துள்ளார்.
முடிவை எடுப்பதில்லை
கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாண முதல்வரான சூசன் ஹோல்ட், அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ட்ரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் மாகாணத்தை பாதிக்கும் எந்த முடிவை தாம் எடுப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் தனது மாகாணம் அமெரிக்காவிற்கான மின்சார ஏற்றுமதியை நிறுத்தக்கூடும் என்று எச்சரித்த நிலையிலேயே, தற்போது சூசன் ஹோல்ட் தமது கருத்தை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார்.
சில நடவடிக்கைகள் மாகாணத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என குறிப்பிட்டுள்ள ஹோல்ட், ஆனால் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் இதுவென்றார்.
ட்ரம்பின் மிரட்டலால், ஏற்கனவே அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகள் சவாலானதாக மாறியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவிற்கு அனுப்பும் பெட்ரோலிய பொருட்கள் அதிக சிக்கல்களை உருவாக்கும் என்றார்.
அமெரிக்காவுக்கு அதிக பாதிப்பு
வெளியான தரவுகளின் அடிப்படையில், 2023ல் நியூ பிரன்சுவிக் மாகாணத்தின் ஏற்றுமதியில் 92.1 சதவீதத்தை அமெரிக்கா பெற்றுள்ளது. ட்ரம்ப் மிரட்டலை அடுத்து, தங்கள் மாகாணத்திற்கு மிகவும் குறைவான பாதிப்பும் அமெரிக்காவுக்கு அதிக பாதிப்பும் ஏற்படுத்துவது எப்படி என ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளை, வரி விதிப்பால் அமெரிக்க நுகர்வோர் மற்றும் அதன் பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதை ட்ரம்பிடம் முன்வைக்கும் முயற்சிகளையும் மாகாண அதிகாரிகள் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ட்ரம்ப் பொறுப்புக்குவரும் முதல் நாளே, இந்த விவகாரம் தொடர்பில் அவருடன் விவாதிக்கவும் கனேடிய மாகாண முதல்வர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |