ட்ரம்பின் வரி விதிப்பால் அமெரிக்கா இதுவரை சம்பாதித்த தொகை எவ்வளவு?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தமது வரிகள் மூலமாக நாள் ஒன்றிற்கு 2 பில்லியன் டொலர் வருவாய் ஈட்டுவதாக இந்த மாதம் கூறியிருந்தார்.
ஏப்ரல் மாதத்தில் இதுவரை
உண்மையில், ட்ரம்பின் வரி விதிப்புகளால் நாள் ஒன்றிற்கு 192 மில்லியன் டொலர் வரையில் அமெரிக்கா வருவாய் ஈட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இறக்குமதி வருவாய் சற்று அதிகரித்திருந்தாலும், அது இன்னும் ஜனாதிபதி பரிந்துரைத்ததை நெருங்கவில்லை என்றே கூறப்படுகிறது.
அமெரிக்க வர்த்தகத் துறையின் சமீபத்திய தரவுகளின்படி, வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 25 அன்று, அமெரிக்கா சுங்க வரி மற்றும் சில கலால் வரிகள் மூலம் 285 மில்லியன் டொலர்களை ஈட்டியது. ஏப்ரல் மாதத்தில் இதுவரை, மொத்தம் 16.1 பில்லியன் டொலரைத் தாண்டியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தின் கடைசி நாளான ஜனவரி 17 அன்று பெறப்பட்ட தினசரி வருமானம் 128 மில்லியன் டொலரில் இருந்து தற்போது அதிகரித்துள்ளது என்றே வெளியான தரவுகளில் இருந்து தெரிய வருகிறது.
உலகெங்கிலும் உள்ள கிட்டத்தட்ட அனைத்து வர்த்தக கூட்டாளிகள் மீதும் பரஸ்பர வரிகளை விதிக்க இருப்பதாக ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்தார். ஃபெண்டானில் வர்த்தகத்தில் சீனாவின் பங்கு காரணமாக, முந்தைய 20 சதவீத விகிதத்துடன் கூடுதலாக, சீனாவிற்கு அதிகபட்சமாக 125 சதவீத வரியை அவர் விதித்தார்.
இதற்குப் பதிலாக, அமெரிக்கா மீது 125 சதவீத வரிகளை சீனா விதித்துள்ளது. அதன் பின்னர், இரு தரப்பினரும் சிறிய பின்வாங்கல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைகளால் அமெரிக்க பொதுமக்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான அதிகபட்ச சராசரி வரி விகிதம் 28 சதவீதமாக எதிர்கொள்கின்றனர்.
770,000 வேலைகள்
ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்பு, மரம் வெட்டுதல் முதல் மின்சார வாகனங்கள் வரை பல பொருட்களுக்கு வரிகள் நடைமுறையில் இருந்தன. பைடன் நிர்வாகம் சீனப் பொருட்கள் மீது கடுமையாக இருந்தது.
2024 ல், பைடன் நிர்வாகம் சீனாவின் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதமும், எஃகு மற்றும் அலுமினியத்திற்கு 25 சதவீதமும், குறைக்கடத்தி சில்லுகளுக்கு 50 சதவீதமும் வரியை அறிமுகப்படுத்தினார். இது ட்ரம்பின் முதலாம் ஆட்சி காலத்தின் தொடர்ச்சி என்றே கூறப்பட்டது.
2022 ஆம் ஆண்டில் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்த பிறகு, சில ரஷ்ய இறக்குமதிகளுக்கு 35 சதவீத வரி விதிப்பு உட்பட பரவலான பொருளாதாரத் தடைகளை பைடன் நிர்வாகம் ஏற்படுத்தியது. கனடா, பிரித்தானியா போன்ற பிற நாடுகளும் ரஷ்யா மீது இதேபோன்ற 35 சதவீத வரியை விதித்தன.
ட்ரம்பின் வரி விதிப்புகளால் ஆட்டோமொபைல் துறையில் உள்ள நிறுவனங்கள் ஏற்கனவே பணிநீக்கங்களையும் வேலை நேர குறைப்பையும் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் 770,000 வேலைகள் இந்த வரிகளால் இழக்க நேரிடும் என்றே ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |