ரஷ்யா போன்று... நாடொன்றின் மீது படையெடுக்க தயாராகும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்
கிரீன்லாந்தை கைப்பற்ற இராணுவப் படையைப் பயன்படுத்த இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி செய்திருப்பது அச்சுறுத்தலை இரட்டிப்பாக்கியுள்ளது.
கைப்பற்ற வேண்டும்
தன்னாட்சி பெற்ற தீவு நாடான கிரீன்லாந்தை டென்மார்க்கிடமிருந்து வாங்குவதற்கான அவரது நிபந்தனைகள் ஏற்கப்படவில்லை என்றால் இராணுவ நடவடிக்கையே தீர்வு என்றும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
டென்மார்க் பிராந்தியமான கனிம வளம் மிகுந்த கிரீன்லாந்தை எவ்வகையிலும் கைப்பற்ற வேண்டும் என ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் மீண்டும் நினைவூட்டி வருகிறார்.
கிரீன்லாந்து மண்ணைக் கைப்பற்ற இராணுவத்தை களமிறக்கும் திட்டத்தை அவர் நிராகரிக்கவில்லை என்றாலும், இராணுவ நடவடிக்கைக்குச் செல்வதற்கு முன்பு ஆராய இன்னும் தூதரக வழிகள் இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.
ஆனால், கிரீன்லாந்தை விலைக்கு வாங்கும் ட்ரம்பின் இந்த முடிவை டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அரசியல்வாதிகள் மொத்தமாக நிராகரித்துள்ளனர். கிரீன்லாந்தில் இராணுவத்தை களமிறக்குவது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மறுப்பு தெரிவிக்க மறுத்த ஜனாதிபதி ட்ரம்ப்,
கிரீன்லாந்து பகுதி தங்களுக்கு கட்டாயம் தேவை என்றும், அங்குள்ள மக்களை அமெரிக்கா கவனித்துக்கொள்ள தயார் எனவும், சர்வதேச பாதுகாப்புக்கு என கிரீன்லாந்து அமெரிக்கா நிர்வாகத்திற்கு தோதான இடம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கனடாவிற்கு மானியம்
ஆனால், கனடாவைப் பொறுத்தவரை அதே இராணுவ அச்சுறுத்தலைப் பயன்படுத்த மாட்டேன் என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார். 2024 ஆம் ஆண்டின் இறுதியில் கனடா அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற வேண்டும் என்ற கருத்தை ட்ரம்ப் முதலில் முன்மொழிந்தார்.
ஆனால் அதன் பின்னர் கனடாவை அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற்ற இராணுவத்தைப் பயன்படுத்துவதை அவர் நிராகரித்தார். மேலும், கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னியுடன் கடந்த வாரம் பேசியதாகவும், அடுத்த சில வாரங்களில் இருவரும் அமெரிக்காவில் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் டிரம்ப் கூறினார்.
அத்துடன், கனடாவிற்கு மானியம் வழங்குவதற்காக வருடத்திற்கு 200 பில்லியன் டொலர் செலவிட வேண்டும் என்று அமெரிக்க பொதுமக்கள் விரும்புவதாக தாம் நினைக்கவில்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையிலேயே உக்ரைனின் கிரீமியா பகுதியை ரஷ்யா இராணுவத்தை களமிறக்கி கைப்பற்றியது போன்று, கிரீன்லாந்தையும் இராணுவத்தை களமிறக்கி கைப்பற்ற ஜனாதிபதி ட்ரம்ப் திட்டமிட்டு வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |