ட்ரம்பின் அச்சுறுத்தல்... ஒரே அறிவிப்பால் ரூ 6 லட்சம் கோடியை இழந்த ஆப்பிள் நிறுவனம்
அமெரிக்காவில் ஐபோன்கள் தயாரிக்கப்படாவிட்டால், அவற்றுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், ஒரேயடியாக ரூ 6 லட்சம் கோடியை இழந்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.
70 பில்லியன் டொலர்கள்
அமெரிக்காவில் ஆப்பிள் தயாரிப்புகள் தயாரிக்கப்பட வேண்டும் என்றே ட்ரம்ப் பிடிவாதமாக உள்ளார். இந்த நிலையில் தமது Truth சமூக ஊடகப் பக்கத்தில் ஐபோன்கள் தொடர்பில் ட்ரம்ப் பதிவிட்டதை அடுத்து ஆப்பிள் நிறுவனப் பங்குகள் சுமார் 70 பில்லியன் டொலர்கள் இழப்பை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்ப் தமது பதிவில், அமெரிக்காவில் விற்கப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் இந்தியாவிலோ அல்லது வேறு நாடுகளிலோ அல்ல, அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கிடம் நான் நீண்ட காலத்திற்கு முன்பே தெரிவித்திருந்தேன்.
ஆனால் அது நடைமுறையில் வராவிட்டால் தோராயமாக 25 சதவீதம் வரியை ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவிற்கு செலுத்த வேண்டும் என்றார். ட்ரம்பின் இந்த கருத்தை அடுத்து ஆப்பிள் பங்குகள் 2.6 சதவீதம் வீழ்ச்சி கண்டது. அத்துடன் நிறுவனத்தின் சந்தை மதிப்பும் 3 டிரில்லியன் டொலருக்கும் கீழ் சரிவடைந்தது.
ஆப்பிள் மட்டும் சிக்கவில்லை
பங்கின் விலை சரிவடைந்த நிலையில் இந்திய மதிப்பில் ரூ 6 லட்சம் கோடியை ஆப்பிள் நிறுவனம் ஒரேயடியாக இழந்துள்ளது.
ட்ரம்பின் இந்த கிடுக்குப்பிடியில் ஆப்பிள் மட்டும் சிக்கவில்லை. சாம்சங் மற்றும் அமெரிக்காவிற்கு வெளியே அலைபேசிகளை தயாரிக்கும் வேறு எந்த அலைபேசி உற்பத்தியாளருக்கும் 25 சதவீத வரி விதிக்கப்போவதாக வெள்ளிக்கிழமை பிற்பகல் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கா ஆப்பிளின் மிகப்பெரிய ஐபோன் சந்தையாகும், அங்கு ஆண்டுதோறும் 60 மில்லியனுக்கும் அதிகமான கைபேசிகளை விற்பனை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |