பிரித்தானியாவில் சட்டவிரோதம் என கருதப்படுவதை இறக்குமதி செய்ய கட்டாயப்படுத்தும் ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததும் முன்னெடுக்கப்படும் வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக உயர்தர அமெரிக்க இறைச்சிக்கான கட்டணமில்லா அணுகலை அனுமதிக்க பிரித்தானியாவை அமெரிக்கா வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்தர அமெரிக்க இறைச்சி
இது டொனால்டு ட்ரம்பால் தெரிவு செய்யப்பட்ட வர்த்தக தலைவரின் முடிவென்றே கூறப்படுகிறது. உயர்தர அமெரிக்க இறைச்சியை இறக்குமதி செய்யும் ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட நடந்த முயற்சிகள் முன்னர் தோல்வியில் முடிந்தது.
அமெரிக்காவில் உற்பத்தியாகும் குளோரினேட்டட் கோழி மற்றும் ஹார்மோன் ஊட்டப்பட்ட மாட்டிறைச்சி இறக்குமதி என்பதை பிரித்தானிய அமைச்சர்கள் எதிர்த்துள்ளனர். இது பிரித்தானியாவில் சட்டவிரோதம் என்றே கூறப்படுகிறது.
ஆனால் தற்போது பிரித்தானியா அனுமதிக்கும் தரத்திற்கு ஏற்றவகையில் இறைச்சி உற்பத்தி செய்யவும் அமெரிக்கா தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பிரித்தானியாவின் உணவு தரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்த எதிர்கால ஒப்பந்தத்தையும் அமைச்சர்கள் நிராகரித்துள்ளனர்.
விவசாயிகள் ஏற்கனவே புகார்
2013 முதல் 2017 வரை பராக் ஒபாமாவின் கீழ் அமெரிக்க வர்த்தக பிரதிநிதியாக செயல்பட்ட மைக்கேல் ஃப்ரோமன் தெரிவிக்கையில், ட்ரம்ப் நிர்வாகம் சீனா மற்றும் வரி விதிப்புகளில் கவனம் செலுத்தவே வாய்ப்புள்ளது என்றார்.
மேலும், அமெரிக்காவில் தற்போது ஹார்மோன் மற்றும் ரசாயனம் இல்லாத கோழி மற்றும் மாட்டிறைச்சிக்கு கணிசமான ஆதரவு உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் வரி இல்லாத அமெரிக்க இறைச்சியை பிரித்தானியா இறக்குமதி செய்யும் என்றால் அது பிரித்தானிய விவசாயிகளுக்கு பேரிடியாக மாறும் என்றே கூறுகின்றனர்.
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இருந்து அதிக மாட்டிறைச்சி மற்றும் ஆட்டுக்குட்டி இறக்குமதியை அனுமதித்த போரிஸ் ஜான்சனின் கீழ் கையெழுத்திடப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து விவசாயிகள் ஏற்கனவே புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |