உலகிலேயே மிகப்பெரி விமான கண்காட்சியை திட்டமிடும் டிரம்ப்
Trump Unveils World's Biggest US Air Show Plan: உலகிலேயே மிகப் பெரிய விமான கண்காட்சியை அமெரிக்காவில் பிரம்மாண்டமாக நடத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
பிரம்மாண்ட விமான கண்காட்சி
அமெரிக்காவை விமான மற்றும் விண்வெளித் துறையின் உலகத் தலைவராக மேலும் முன்னிலைப்படுத்தும் நோக்கில் புதிய பிரம்மாண்ட கண்காட்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி உலகின் மிகப்பெரிய விமானக் கண்காட்சியாக உருவாகும் என அவர் உறுதியளித்தார்.

CapeWeek
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் (Kennedy Space Center) நடைபெறவுள்ள இந்த புதிய நிகழ்ச்சிக்கு "CapeWeek" எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இது இன்னும் இரண்டு ஆண்டுகளில் தொடங்கப்படும் என்று டொனால்டு டிரம்ப் தனது உரையில் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி விமானத் தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் தொடர்புடைய தொழில்துறைகளை ஒரே தளத்தில் கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலிருந்தும் தொழில்துறை நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை ஈர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
தற்போது பிரான்ஸ் நாட்டின் பாரிஸ், இங்கிலாந்தின் பார்ன்பரோ (Farnborough) மற்றும் துபாய் ஆகிய இடங்களில் நடைபெறும் விமானக் கண்காட்சிகள் உலகளவில் மிகப்பெரிய நிகழ்வுகளாக கருதப்படுகின்றன. ஆனால் அவற்றை விட பெரிய அளவில் அமெரிக்காவில் இந்த புதிய நிகழ்ச்சி நடத்தப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும், இந்த முயற்சி அமெரிக்காவின் விண்வெளி மற்றும் விமானத் துறையின் திறன்களை உலகிற்கு வெளிப்படுத்துவதோடு, சர்வதேச வணிக ஒப்பந்தங்கள் மற்றும் முதலீடுகளையும் அதிகரிக்க உதவும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக, கடந்த செப்டம்பரில் இம்மானுவேல் மேக்ரான் தலைமையில் பாரிஸில் நடைபெற்ற சர்வதேச விண்வெளி மாநாட்டில் அமெரிக்க நிறுவனங்கள் பங்கேற்பதை வெள்ளை மாளிகை தவிர்க்குமாறு வலியுறுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து, அமெரிக்காவிலேயே உலகத் தரத்திலான புதிய நிகழ்வை உருவாக்கும் திட்டமாக CapeWeek பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |