3 மாத போராட்டத்திற்கு பிறகு டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து.., இந்திய அரசின் அறிவிப்பால் அரிட்டாபட்டி மக்கள் கொண்டாட்டம்
அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக இந்திய அரசு அறிவித்த நிலையில் அரிட்டாபட்டி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
டங்ஸ்டன் ஏலம் ரத்து
தமிழக மாவட்டமான மதுரை, மேலூர் அருகே உள்ள நாயக்கர்பட்டியில் 2,015.51 ஹெக்டேர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை குத்தகைக்கு விடும் ஏல அறிவிப்பு நவம்பர் 7-ம் திகதி வெளியானது. இது, வேதாந்தாவின் துணைக் குழுமமான ஹிந்துஸ்தான் ஜிங் லிமிடெட்டுக்கு வழங்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் அம்மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, அரிட்டாபட்டி உள்ள 25 கிராமங்களில் இந்த ஏலத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் தொடர்ந்து மக்கள், விவசாயிகள், வணிகர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம், கடையடைப்புப் போராட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது.
இதனால், டிசம்பர் 9-ம் திகதி அன்று தமிழக சட்டமன்றத்தில் டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே பல கிராம மக்கள் போராட்டங்களை நடத்தி வந்தன. மேலும், தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு பொருட்களை வாங்காமல் புறக்கணித்தனர்.
இந்நிலையில், டங்ஸ்டன் கனிம ஏலத்தை ரத்து செய்வதாக இந்திய சுரங்கத் துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், "பல ஆலோசனைகளுக்கு பிறகு பல்லுயிர் தலத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் இந்திய அரசின் உறுதிப்பாட்டை கருத்தில் கொண்டு, டங்ஸ்டன் கனிம ஏலத்தை ரத்து செய்ய சுரங்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை 3 மாதங்கள் நீடித்த போராட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியானதால் அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |