41 ஆண்டுகளுக்கு முன் இளம்பெண்ணொருவரை கொன்ற வெளிநாட்டவர் சிக்கினார்
ஜேர்மனியில் 19 வயது இளம்பெண் ஒருவரைக் கொலை செய்துவிட்டு 41 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்
ஜேர்மனியின் பவேரியா மாகாணத்திலுள்ள Aschaffenburg என்னுமிடத்தில் செவிலியர் படிப்பு படித்துவந்தவர் மரியா (Maria Koehler, 19) என்னும் இளம்பெண்.

1984ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 30ஆம் திகதி மரியா மருத்துவமனைக்கு வேலைக்கு வராததால் பொலிசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்குப் பின் அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது.
மரியா உயிரிழப்பதற்கு முந்தைய நாள், நாஸ்மி (Nazmi Gezginci) என்னும் நபர் மரியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையும், தொலைவிலிருந்து அவர் மரியாவை நோட்டம் விட்டுக்கொண்டிருந்ததையும் கண்டதாக அந்த பகுதியில் வசிப்பவர்கள் பொலிசாரிடம் கூறினார்கள்.
ஆனால், நாஸ்மியை எங்கும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இந்நிலையில், 2024ஆம் ஆண்டு நாஸ்மி துருக்கியில் இருப்பது தெரியவந்தது.
யார் இந்த நாஸ்மி?
நாஸ்மி துருக்கியில் பிறந்தவர். ஆனால், அவர் ராணுவ சேவை செய்ய மறுத்ததால் துருக்கி குடியுரிமையை இழந்துள்ளார். 1978ஆம் ஆண்டு, மாணவர் விசாவில் ஜேர்மனிக்கு வந்த நாஸ்மி, மரியாவுடன் பழகத் துவங்கியுள்ளார்.

சுமார் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு, மரியா நாஸ்மியுடனான உறவைத் துண்டித்துள்ளார். ஜேர்மனியிலுள்ள Hanau என்னுமிடத்தில் முகாமிட்டிருந்த ராணுவ வீரர் ஒருவரை அவர் காதலிக்கத் துவங்கியுள்ளார்.
ஆத்திரமடைந்த நாஸ்மி, மரியா தங்கியிருந்த அறைக்குச் சென்று ஒரு துப்பட்டாவால் அவரது கழுத்தை நெறித்துக்கொன்றுள்ளார்.
மறுநாள் தனது காரை ஃப்ராங்க்பர்ட் விமான நிலையத்தில் விட்டு விட்டு துருக்கிக்கு விமானம் ஏறிவிட்டார் நாஸ்மி.

விடயம் என்னவென்றால், பொலிசார் அவரைத் தேடிக்கொண்டிருக்க, அவரோ, துருக்கியில் ஒரு ஜேர்மன் பெண்ணை திருமணம் செய்துகொண்டு, 1988ஆம் ஆண்டு, வேறொரு பெயரில் மீண்டும் ஜேர்மனிக்கு வந்து, தன் காதலியைக் கொலை செய்த அதே Aschaffenburgஇல் 16 ஆண்டுகள் வாழ்ந்துவந்துள்ளார்.
பின்னர் அவர் துருக்கிக்கே சென்றுவிட்ட நிலையில், 2024ஆம் ஆண்டு, ஜேர்மன் அதிகாரிகள் மீண்டும் மரியா வழக்கை விசாரிக்கத் துவங்கியுள்ளார்கள்.
இண்டர்போல் உதவியுடன், DNA ஆதாரத்தின் அடிப்படையில் நாஸ்மி துருக்கியில் இருப்பது தெரியவரவே, ஜேர்மன் அதிகாரிகளின் கோரிக்கையின் பேரில், துருக்கி அதிகாரிகள் அவரை Serinyol என்னுமிடத்தில் கைது செய்துள்ளார்கள்.

நாஸ்மி ஜேர்மனிக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், விசாரணையின்போது தான் மரியாவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
தற்போது 66 வயதாகும் நாஸ்மி மீது மரியா கொலை தொடர்பில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணை துவங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |