ஹமாஸ் ஆதரவாளர் என கைது செய்யப்பட்ட வெளிநாட்டு மாணவி: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்
அமெரிக்காவில் ஹமாஸ் படைகளின் ஆதரவாளர் என கைது செய்யப்பட்டு விசாவும் ரத்து செய்யப்பட்ட துருக்கி மாணவியின் விவகாரத்தில் மொத்தமும் தலைகீழாக மாறியுள்ளது.
அவருக்கு தொடர்பில்லை
உண்மையில் அந்த மாணவிக்கு பயங்கரவாதம் அல்லது யூத எதிர்ப்புவாதத்துடன் எவ்வித தொடர்புகளும் இல்லை என்றே அமெரிக்க வெளிவிவகார அமைச்சக குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 வயதான Rumeysa Ozturk அமெரிக்காவின் Tufts பல்கலைக்கழகத்தில் பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் மார்ச் 25ம் திகதி பெடரல் அதிகாரிகளால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார்.
அமெரிக்க அரசாங்கத்தால் பயங்கரவாத அமைப்பு என அடையாளம் காணப்பட்டுள்ள ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக அவர் களமாடியதாக அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர்.
இதனையடுத்து லூசியானாவில் உள்ள குடியேற்ற தடுப்பு மையத்தில் சிறை வைக்கப்பட்டார். இதே காரணத்திற்காக நூற்றுக்கணக்கான மாணவர்கள் குறித்த தடுப்பு மையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சகம் முன்னெடுத்த தீவிர விசாரணையில், மாணவி Ozturk மீது எந்த தவறும் இல்லை என்றும், ஹமாஸ் அல்லது அது போன்ற எந்த அமைப்புகளுடனும் அவருக்கு தொடர்பில்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக
மாணவியின் கைதுக்கு முன்னரே அவர் தொடர்பான குறிப்பாணை வெளிவிவகார அமைச்சகத்தால் அளிக்கப்பட்டுள்ளதும் தற்போது அம்பலமாகியுள்ளது. அமெரிக்க மக்களுக்கு அல்லது நாட்டின் பாதுகாப்பிற்கு தொடர்புடைய மாணவியால் எந்த அச்சுறுத்தலும் இருப்பதாக தரவுகள் இல்லை என்றே பாதுகாப்பு முகமைகள் மற்றும் அதிகாரிகள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இஸ்ரேலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் Ozturk கலந்துகொண்டுள்ளார் என கூறப்படுகிறது. மாணவி Ozturk மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என உறுதி செய்துள்ள போதும், குடிவரவு மற்றும் குடியுரிமைச் சட்டத்தின் ஒரு பிரிவின் கீழ் அவர் நாடு கடத்தப்படலாம் என்றே வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளியான தரவுகளின் அடிப்படையில் மார்ச் 21ம் திகதி அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டார் என்பதாலையே மாணவி Ozturk தற்போது நாடுகடத்தப்பட இருக்கிறார்.
Ozturk விவகாரம் டஹ்ற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. அவரது நாடுகடத்தல் என்பது அவருக்கு அளிக்கப்பட்டுள்ள முதல் திருத்த உரிமைகளை மீறும் நடவடிக்கை என்று அவரது சட்டத்தரணிகள் வாதிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |