தீபாவளி கொண்டாட்டம் - தொண்டர்களுக்கு தவெக முக்கிய உத்தரவு
தீபாவளி கொண்டாட்டம் தொடர்பில் தவெக தொண்டர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொண்டர்களுக்கு தவெக உத்தரவு
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. தற்போது வரை விஜய் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்காதது விமர்சனத்தை பெற்று வருகிறது.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என விஜய் அறிவித்தார். தற்போது த.வெ.க. சார்பில் அவர்களின் வங்கி கணக்கில் அந்த பணம் வரவு வைக்கப்பட்டது.
இந்நிலையில், தவெக சார்பில் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என கட்சியில் இருந்து தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தவெக கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கரூரில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவத்தால் நம்மைவிட்டுப் பிரிந்த நம் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நம் கழகத் தலைவர் அண்ணன் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இந்த ஆண்டு கழகத்தின் சார்பில் யாரும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட வேண்டாம்.
— Loyola Mani (@LoyolaMani) October 18, 2025
இந்த பதிவில், "கரூரில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவத்தால் நம்மைவிட்டுப் பிரிந்த நம் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நம் கழகத் தலைவர் அண்ணன் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இந்த ஆண்டு கழகத்தின் சார்பில் யாரும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட வேண்டாம்." என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |