ரொம்ப கேவலமா பேசுறாங்க - முதல்வர் விஜய் முன் கண்கலங்கிய வேட்பாளர் சத்யபாமா
tvk candidate sathyabama cries infront of cm vijay: தாராபுரம் பிரச்சாரத்தில் பேசிய தவெக வேட்பாளர் சத்யபாமா, என்னை ரொம்ப கேவலமா பேசுறாங்க என முதல்வர் விஜய் முன் கண்கலங்கியுள்ளார்.
கண்கலங்கிய வேட்பாளர் சத்யபாமா
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து, தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் வாக்கு சேகரித்தார்.
இந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ் ஆகியோர் பேசியதைத் தொடர்ந்து, தவெக வேட்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான சத்யபாமா பேசினார்.
இதில் பேசிய அவர், "நாங்கள் இதற்கு முன்பு பல்வேறு அரசியல் கூட்டங்களைப் பார்த்துள்ளோம். சில கூட்டங்களுக்கு மக்களைப் பணம் கொடுத்து அழைத்து வருவார்கள், அவ்வாறு வருபவர்கள் சிறிது நேரத்திலேயே கலைந்து சென்று விடுவார்கள்.

ஆனால், இவ்வளவு நேரம் ஆன பிறகும் மக்கள் காத்திருந்து ஒரு தலைவரைப் பார்க்கிறார்கள் என்றால், அது மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரைத்தான் நினைவுபடுத்துகிறது. புரட்சித் தலைவரே மறுபிறவி எடுத்து வந்துவிட்டாரோ..
எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் உடன்படிக்கை செய்துவிட்டு எங்களிடம் வந்து நான் முதலமைச்சர் ஆகப் போகிறேன் என மகிழ்ச்சியாக கூறினார். எடப்பாடி பழனிசாமி என்கிற தலைமை பிடிக்காமல்தான் நாங்கள் வெளியே வந்தோம். அந்தக் கட்சிக்கு நாங்கள் துரோகம் செய்யவில்லை.
என்னை பெண் என்றும் பார்க்காமல், வலைதளங்களில் அவதூறு செய்கிறார்கள். 2 மாதமாக செல்போன் பார்க்கவில்லை.. நான் என்ன செய்தேன்? திமுகவால் நான் பாதிக்கப்பட்டேன், அதோடு சேர்ந்ததால் தான் நான் வெளியே வந்தேன்.
என்னிடம் தவறு இருந்தால், நான் துணிச்சலாக ஓட்டு கேட்டு வர முடியுமா? எனக்கு போட்டியிட முதல்வர் வாய்ப்பு தருவாரா? ஒரு பெண் என்றும் பார்க்காமல் கேவலமாக பேசுகிறார்கள்.
உங்களின் பதவி சுகத்துக்காக என்னை ஆபாசமாக பேசுகிறீர்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை.. மக்களுக்கில்லை நல்லது செய்ய வேண்டும் என்றுதான் ஆளும் கட்சிக்கு வந்தேன்" என உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கி பேசினார்.

இதனை கவனித்த அருகில் இருந்த முதல்வர் விஜய், அவரின் தோளை தட்டி ஆறுதல் கூறினார்.