ஆளுநர் உரைக்கு முன்பே தேசிய கீதம் - சட்டமன்ற மரபை மாற்றிய தவெக அரசு
ஆளுநர் உரைக்கு முன்பாக தேசிய கீதம் பாடி, தமிழ்நாடு சட்டமன்ற மரபை தவெக அரசு மாற்றியுள்ளது.
சட்டமன்ற மரபை மாற்றிய தவெக அரசு
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசின் முதல் சட்டமன்ற கூட்டதொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிகழ்வு, அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வில், முதலில் வந்தே மாதரமும், 2வது தேசிய கீதமும், இறுதியாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாக பாடப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அது ஆளுநர் மாளிகை சார்பில் நடைபெறும் நிகழ்வு, தமிழக அரசின் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் இடம்பெறும் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று தொடங்கிய சட்டமன்ற கூட்டதொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, 2வதாக தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது.
வழக்கமாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் அவை நடவடிக்கைகள் முடியும் போதே, தேசிய கீதம் பாடப்படும். ஆனால் இந்த முறை தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட உடன் 2வதாக தேசிய கீதமும் பாடப்பட்டது.
முன்னதாக கடந்த திமுக ஆட்சியில், 2024 ஆம் ஆண்டு முதல் ஆளுநர் உரைக்கு முன்பாகவே தேசிய கீதம் பாடப்பட வேண்டும் எனக்கூறிய அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி, அதற்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்த நிலையில் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார்.
தற்போது தேசிய கீதத்தை முன்னதாகவே பாடி, தமிழ்நாடு சட்டமன்றத்தின் நீண்டகால மரபை முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மாற்றியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |