எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.., நீட் குறித்து ஆவேசமாக பதிவிட்ட விஜய்
நீட் தேர்வை மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
விஜய் பதிவு
நடந்த சட்டமன்ற கூட்டத்தில் நீட் தேர்வு குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது. அப்போது, 4 ஆண்டுகள் கடந்த பின்னரும் நீட் தேர்வை திமுக அரசு ரத்து செய்யவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.
அதற்கு, நீட் தேர்வை மத்திய அரசு தான் ரத்து செய்ய முடியும் என்றும், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு நிச்சயமாக ரத்து செய்யப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
இந்நிலையில், இதற்கு கருத்து தெரிவிக்கும் விதமாக தவெக தலைவர் விஜய் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் தனது பதிசிவில், "எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே.... என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன.
தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது.
இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது. கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள்.
ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?
எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |