சிஎம் சார் பழி வாங்க வேண்டுமென்றால் என்னை.. - வீடியோ வெளியிட்ட விஜய்
கரூர் உயிரிழப்பு விவகாரம் குறித்து தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார்.
கரூர் உயிரிழப்பு
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தவெக மாவட்ட செயலாளர்கள் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், வதந்தி பரப்பியதாக கூறி, 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யூடியூபர் ஃபெலிக்ஸ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழப்பு நடைபெற்ற பின்னர் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் பேசிய நிலையில், விஜய் தனி விமானம் மூலம் சென்னைக்கு சென்றது கடும் விமர்சனத்தை பெற்றது.
வீடியோ வெளியிட்ட விஜய்
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார்.
இதில் பேசிய அவர், "என் வாழ்க்கையில் இதுவரையில் இதுபோன்ற வலியை அனுபவித்தது இல்லை. நடக்கக் கூடாதது நடந்து விட்டது. உயிரிழந்த அனைவர்க்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
— TVK Vijay (@TVKVijayHQ) September 30, 2025
மேலும், அசம்பாவிதம் எதுவும் நடக்கக்கூடாது என்பதற்காக தான் நான் மருத்துவமனைக்கு செல்லாமல் சென்னை வந்துவிட்டேன். விரைவில் மக்களை சந்திப்பேன்.
ஏற்கெனவே 5 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தோம். அங்கெல்லாம் நடக்காமல் கரூரில் மட்டும் ஏன் நடக்கிறது. மக்களுக்கு எல்லாம் தெரியும். கரூர் மக்கள் நடந்த உண்மைகளை சொல்லும் போது எனக்கு கடவுளே வந்து சொல்வது போல் இருக்கிறது. சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும்.
நாங்கள் எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் தான் பேசினோம். அதைத்தாண்டி எந்த தவறும் செய்யவில்லை. இருந்தாலும், நமது தவெக நிர்வாகிகள் மற்றும் சமூகவலைத்தள நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிஎம் சார், பழிவாங்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். தொண்டர்கள் மீது கை வைக்க வேண்டாம். வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ தான் இருப்பேன். தோழர்களே, நமது அரசியல் பயணம் இன்னும் வீரியமாக தொடரும் என பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |