மீண்டும் ரோடு ஷோ செல்லும் விஜய் - எங்கே தெரியுமா?
தவெக தலைவர் விஜய் டிசம்பர் 5 ஆம் திகதி மீண்டும் ரோடு ஷோ செல்ல திட்டமிட்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த செப்டம்பர் 13 ஆம் திகதி திருச்சியில், மக்கள் சந்திப்பு என்ற பெயரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

அதைத்தொடர்ந்து, அரியலூர், நாமக்கல், கரூர் என அடுத்தடுத்த வாரங்களில் தனது பிரச்சாரங்களை மேற்கொண்டார்.
கரூரில் கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பையடுத்து, தனது பிரச்சார பயணத்தை ரத்து செய்தார்.
கரூர் சம்பவத்திற்கு பின்னர், கடந்த 23 ஆம் திகதி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மக்களை சந்தித்து பேசினார்.

உள்ளரங்கு சந்திப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், 2000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மீண்டும் ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார் .
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ
வரும் டிசம்பர் 5 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, புதுச்சேரியில் ரோடு ஷோ மற்றும் மக்கள் சந்திப்புக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி தவெக சார்பில் காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

காலாப்பட்டில் தொடங்கி அஜந்தா சிக்னல், உப்பளம் வாட்டர் டேங்க், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் வழியாக சாலை மார்க்கமாக வருகை தந்து மக்களை சந்திக்க உள்ளார்.
மேலும், உப்பளம், சோனம் பாளையம் வாட்டர் டேங் அருகில் ஒலிப்பெருக்கி மூலம் உரையாற்ற உள்ளார்.
தற்போது வரை காவல்துறை தரப்பில் இருந்து அனுமதி வழங்கப்படவில்லை.
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியின் புஸ்ஸி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ வாக இருந்த தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது.
பாஜக கூட்டணியில் ரங்கசாமி அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், விஜய்யின் இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், கட்சி ஆரம்பித்த பின்னர் விஜய்யின் முதல் புதுச்சேரி பயணம் இதுவாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |