ஆம்ஸ்ட்ராங் படுகொலை.., சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தமிழக அரசுக்கு விஜய் கோரிக்கை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இவரது மறைவிற்கு தமிழக அரசியல் கட்சியினர் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்தும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடாகவும் உள்ளது என்றும் கூறி வருகின்றனர். மேலும், பகுஜன் சமாஜ் கட்சியினர் சாலை மறியல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஜய் இரங்கல்
இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
ஆம்ஸ்ட்ராங்கை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.
சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |